துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
விசாரணைகள் ஆரம்பம்
பாதுகாப்பு அமைச்சின் மூலம் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் பெற்றிருந்த 1500 நபர்களுக்கு கடந்த அரசாங்கங்களின் காலத்தில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் அவற்றை மீள ஒப்படைக்குமாறும், உரிய விசாரணைகளின் பின்னர் பொருத்தமானவர்களுக்கு மீண்டும் துப்பாக்கிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவொன்றும் விதிக்கப்பட்டு, இரண்டு தடவைகள் அது நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 42 நபர்கள் தங்கள் வசம் இருந்த துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறியுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.