துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பியோடிய ஆளும் கட்சி உறுப்பினர்
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார, ஹொரணை அங்குருவாதொட்ட தொம்பகொட இராணுவ முகம் சந்தியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் தனது தாயின் மூன்று மாத நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இரவு நடத்திய புண்ணியதானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துள்ளதுடன் அவர் இரவு 11 மணியளவில் அதில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த சிலருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு சமாதானம் செய்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாகனத்தில் இருந்தவாறு வீட்டை நோக்கியும் வாகனத்தை நோக்கியும் மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது அங்குருவாதொட்ட பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸார் இரண்டு வெற்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் அங்குருவாதொட்ட பொாலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹொரணை பிரதேசத்தில் வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகிறது.