நீண்ட தூர ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையர்- தாய்நாட்டுக்கு விஜயம் !
சொந்தமாக நீண்ட தூர சொகுசு ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே தாய்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், தனது சொந்த ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுகாதாரத் துறை சார்ந்த பல வணிகங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கையைச் சேர்ந்த பில்லியனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கைக்கு வருகை தந்த 'Gulfstream G-V' ரக ஜெட் விமானமானது 12,000 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டதாகும்.
இலங்கையின் முதலாவது தனியார் ஜெட் விமானமான, 1980களில் தொழிலதிபர் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'Learjet 35 A' விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் பலர் இவ்வாறு சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்துள்ளார்கள் என்பதுடன் அவர்கள் அந்த ஜெட்களிலேயே தங்களது பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.