22 இலட்சம் அகல் விளக்குகள் படைத்த கின்னஸ் சாதனை
இந்தியாவில் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22 இலட்சம் விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டமை கின்னஸ் உலக சாதனையாக மாறியுள்ளது.
வனவாசமாக 14 ஆண்டுகளை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது.
கின்னஸ் உலக சாதனை
இந்த ஆண்டு வழக்கம் போலவே தீபோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீபோற்சவ விழாவில் 15 இலட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.இது கின்னஸ் சாதனையாக அமைந்தது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழா அதை தகர்த்துள்ளது.
#WATCH | Uttar Pradesh: 'Deepotsav' celebrations underway in Ayodhya as firecrackers lit up the night sky.#Diwali pic.twitter.com/KfnzOmodBJ
— ANI (@ANI) November 11, 2023
கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்தது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 2017-இல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2019-இல் 4.10 இலட்சம், 2020-இல் 6 இலட்சம், 2021-இல் 9 இலட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 54 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 22 இலட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கி உள்ளது.