நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகை
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று(12) விசேட பூஜைகள் நடைபெற்றன.
வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றன.
நல்லூர் சிவன் ஆலயம்
இன மத ஐக்கியத்திற்கான பூஜை வழிபாடு தீபாவளியை முன்னிட்டு நல்லூர் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
தேசிய இன நல்லிணக்கத்துக்கான அதிகார சபையின் தலைவர் கந்தையா கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இன மத ஐக்கியத்திற்கான பொங்கல் இடம்பெற்றதுடன் விசேட யாகம் வளர்க்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், தொழிலதிபர் இ.எஸ்.பி.
நாகரத்தினம், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் வேல் நம்பி, யாழ்ப்பாண பிரதான
பொலிஸ் பரிசோதகர் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள்
இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் (12) தீபத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் நாட்டில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் நீங்கி நாடு சுபீட்சம் அடையவும் சிறப்பு யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.
இன்றைய தீபாவளி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின சிறப்பு வாய்ந்த ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
செய்தி - குமார்
மன்னார்
மன்னார் மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் தீபத்திருநாளை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுட்டு வருவதுடன் மன்னார் மாவட்ட மக்கள் தீபத் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆசிக்
மலையகம்
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று(12) வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் அட்டன் பகுதியில் உள்ள அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சுவாமி ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கிருஷாந்தன்