ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல் : பாரத் அருள்சாமி பதிலடி
ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றி வருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர்மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்.
வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்தி வந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகி விடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளதனாலேயே புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
காணி வழங்க திட்டம்
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை, அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டது போல் சாதாரணமான உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது.
மேலும், விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன் தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும்.
இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும். இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்.
அரச காணியை பிரித்து வழங்கல்
கடந்த ஆட்சியின் போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது, புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன் தான் கையளிக்கப்படும்.
கடந்த காலங்களில் கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டது போல் காட்போட் காணி வழங்கப்பட மாட்டாது. கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க தான் போகின்றோம்.
தெளிவுபடுத்தல் உரை
காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்து வருவதால் நடுங்கியுள்ளனர்.
கடந்த அரசின் இரு அமைச்சுக்களையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாதவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர் மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பது கூட எமக்கு இழுக்கு தான். இருந்தாலும் சமூகத்தில் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால் தான் இந்த தெளிவுபடுத்தல்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்டபடி நிதி கிடைத்தால் கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடரும்: முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |