திட்டமிட்டபடி நிதி கிடைத்தால் கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடரும்: முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி
புதிய இணைப்பு
திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது
இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்
பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொக்குதொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டமனித புதைகுழியின் அகழ்வானது 1ம் 2ம் என இரண்டு கட்டங்களில் நடைபெற்றிருந்தது.
அகழ்வு தொடர்பான வழக்கு
முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த அகழ்வு தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ,
அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணியினை கொண்டு நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை. இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
ராஜ் சோமதேவின் அறிக்கை
அத்தோடு, முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களும் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளினுடையவை எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் தொடர்பிலும், மேலும் எந்தளவு பிரதேசத்தில் எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பது பற்றியும், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எத்தனையாம் ஆண்டுக்குரியவை என்பது குறித்தும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையில், மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் அனைத்தும் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டுள்ளன என்றும், இவை எந்தவொரு மதச் சடங்கு முறைகளையும் பின்பற்றி அடக்கம் செய்யப்படவில்லை என்றும், இந்த உடல்கள் காணப்படும் இடத்தில் மேலும் 2 மீற்றர் தூரத்துக்கு நிலத்துக்கு கீழே இரு அடுக்குகளில் உடல்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வு பணி தொடர்பான வழக்கானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
குறித்த வழக்கானது இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்டது.
மூன்றாம் கட்ட அகழ்வு
இந்நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பிப்பது குறித்தே இன்றையதினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |