பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்த குழு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரியூட்டியமைக்கு போராட்டத்தில் இணைந்துக்கொண்ட புதிய குழு ஒன்றே காரணம் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்தே நேற்று(09) இரவு 9 மணியளவில் குழு ஒன்று, இந்த வீட்டை எரியூட்டியது.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகக் கோரி நேற்று மாலை முதல் கொழும்பு 3, 5வது வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு வெளியே சுமார் 200 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியிருந்தது.
கண்ணீர் புகை

போராட்டக்காரர்கள் குடியிருப்பை நோக்கி செல்ல முயன்றபோது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன்போதே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இல்லத்திற்கு வெளியே நின்றிருந்த தொலைக்காட்சியின் பல ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து வலையமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்தம் ஆறு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் பற்றிய செய்தி பரவியதும், ஒரு பெரிய குழு அந்த இடத்துக்கு வந்தது. ஒரு பொலிஸ் பேருந்தும் போராட்டக்காரர்களால் தகர்க்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமரின் இல்லம் மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளன. இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரு புதிய குழு ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில், பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளது.
தீயணைப்பு

இறுதியில் ஒரு குழு பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, இரவு 9 மணியளவில் குடியிருப்புக்கு தீ வைத்தது.
தீயணைப்பு வாகனம் வந்ததும், பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் தீயை அணைக்க விடாமல் குறித்த குழு, தீயணைப்பு வீரர்களைத் தடுத்ததுடன், பக்கத்து வீடுகளுக்கு மாத்திரம், தீ பரவவிடாமல் இருக்க அனுமதித்தது. தீயணைப்பு வாகனமும் போராட்டக்காரர் ஒருவரின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பில் கொழும்பு தீயணைப்புத் துறை அதிகாரி கே.ஏ.வின்சென்ட் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
“இந்த நிலையில் முதல் தீயணைப்பு இயந்திரத்தின் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றபோது எதிர்ப்பாளர்களால் அச்சுறுத்தப்பட்டனர், சிறிது நேரம் கழித்து அவர்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினர். எனினும் இரண்டு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இருப்பினும் தீயணைப்பு பணியை செயற்படுத்த முடியாமையால்,மருதானையில் உள்ள டார்லி வீதியில் உள்ள
தலைமையகத்திற்கு இரண்டு வாகனங்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே வீடு முழுமையாக தீக்கிரையானது”என அவர்
தெரிவித்துள்ளார்.