புதுக்குடியிருப்பில் கோலாகலமாக இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா 40 ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி மிகச்சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழாவானது இன்றையதினம்(18) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாட்டு நிகழ்வுகளுடன் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்தின் முன்பாக ஆரம்பமானது.
இதனைத் தொடர்ச்து புதுக்குடியிருப்பு நகர்வழியாக வந்து கலாச்சாரத்தை பேணும் வகையில் ஊர்தி பவனியுடன் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சிறப்பு விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மட்டபத்தினை சென்றடைந்து கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
பண்பாட்டு பெருவிழா
இக் கலை விழாவில் 40 அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள், கோலாட்டம், கும்மி , கரகம் குடமுதல், சிலம்பு போன்ற கலைகள் காண்பிக்கப்பட்டு அரங்க நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன், வடமத்திய மாகாண பிரதி பிரதம செயலாளர் சி. குணபாலன், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேசபை தவிசாளர் வே. கரிகாலன், புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், பொதுமக்கள், சமூக அமைப்பினர், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ்வருடம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையும் குறித்த நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.















