கறுப்பு பணம் குறித்து சிஐடியின் அதிரடி நடவடிக்கை.. ஜனாதிபதி இன்று வெளியிட்ட தகவல்
கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதி வருவாய்க்கு சமமான சுமார் 1 பில்லியன் டொலர் தொகையானது சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டிருந்ததாகக் கூறினார்.
சட்டவிரோத வழிகள் மூலம் டொலர்கள் வெளியேறுவதைத் தடுக்க CID மற்றும் சுங்கத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் முறையாக வந்து சேர்வதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நிதி ஒதுக்கீடு
முறைகேடான பொருளாதாரத்தை முடக்கியதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7 வீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத சாதனையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.[
மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவாயை அதிகரித்ததன் மூலம் 1957 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு மூலதனச் செலவினங்களுக்காக வரலாற்றுச் சாதனையாக 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.