அரசாங்கப் பேச்சாளரின் கருத்தால் வலுக்கும் கண்டனங்கள்
அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa), ஊடகங்கள் முன்பாக வெளியிட்ட விடயம் பல்வேறு தரப்புகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த ஜனவரி 28ஆம் திகதி நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த சட்டமூலம் தொடர்பான நகல் வரைவு பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற சபாநாயகருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சஜித் பிரேமதாச கண்டனம்
எனினும் நேற்றைய (05)நாடாளுமன்ற அமர்வின் போது அவ்வாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை சபாநாயகருக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகரே நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதுடன், நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த விடயம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் பலரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |