அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்
நெடுந்தூர பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கும் வீதியோர உணவகங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புத்தளம் பாதையில் முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்களையும் அடையாளம் காண
நாடாளுமன்ற உறுப்பினர் சேனா நானாயக்கரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நெடுந்தூர பேருந்துகள் நிறுத்தப்படும் 73 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புத்தளம் பாதையில் 14 உணவகங்களும், ஹை லெவல் வீதியில் 19 உணவகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கூட்டு கால அட்டவணையை அறிமுகப்படுத்தும்போது ஏனைய பகுதிகளிலும் உணவகங்களை அடையாளம் காணப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் (PHI) மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஒழுங்குபடுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |