போராட்டங்களை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நாமல் ராஜபக்ச
போராட்டங்கள் காரணமாகவே கோவிட் பெருந்தொற்று பரவுகை அதிகரித்தது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாடு முழுவதிலும் ஏற்பட்ட போராட்ட அலைகளினால் கோவிட் அலை தீவிரமடைந்தது, இது சாதாரண விடயமேயாகும்.
நாட்டு மக்களுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் மாத்திரை வழங்கப்பட்டதன் பின்னர் சுகாதார வழிகாட்டல்களை மீறி, தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகக் கூறி அரசியல் காரணங்களுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களே இன்று ஆபத்தில் உள்ளனர்.
போராட்ட அலையினால் கோவிட் அதிகரித்தது. போராட்டங்களினால் சாதாரண மக்களுக்கு எவ்வாறான அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே கேள்வியாகும்.
எதிர்க்கட்சிகள் நாட்டை முடக்க சொல்கின்றார்கள், நாட்டை முடக்க வேண்டியதில்லை.போராட்டங்களை கைவிடுமாறு நான் எதிர்க்கட்சிகளிடம் கோருகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.