குடிபுகு சான்றிதழ் இல்லாத கட்டடத்தில் ஆளுநர் செயலகம் - குருபரன் விடுத்துள்ள அதிரடி கோரிக்கை
குடிபுகு சான்றிதழ் பெறாத கட்டடத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக சட்டவிரோதமாக கடமையாற்றி வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலக மறுப்பின், கிஷோரை பதவி நீக்கிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற வேண்டும் என்றும் சட்டத்துறை முன்னாள் தலைவர் கு. குருபரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி விலக வேண்டும்..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண ஆளுநரின் செயலகப் பணிமனை அமைந்துள்ள கட்டடத்திற்கு குடிபுகுச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 20.08.2026 அன்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, குறித்த கட்டடத்திற்கு குடிபுகுச் சான்றிதழ் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என ஆளுநர் செயலகத்தின் தகவல் அலுவலரால் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தரப்பிலிருந்து வந்த கடிதம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முன்னாள் தலைவரும், மூத்த சட்டத்தரணியுமான கு. குருபரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைத்த வினவலுக்கே ஆளுநர் செயலகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வணிக உரிமம் வழங்குவதற்கு 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கு குடிபுகுச் சான்றிதழைக் கட்டாயமாக்கக் கூடாது என்றும், அவ்வாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் உள்ளூர் வணிகர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் மன்ற அமர்வின்போது கருத்து தெரிவித்தார் என்பதற்காக, சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரை வடக்கு மாகாண ஆளுநர் கடந்த 19.06.2026 அன்று பதவியிலிருந்தும் மன்ற உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியிருந்தார்.

குடிபுகுச் சான்றிதழ் கட்டாயமானது என்ற வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, அதனை வணிகர்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கிஷோர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் செயலகம் வழங்கிய பதிலின் அடிப்படையில், குடிபுகுச் சான்றிதழ் பெறாத கட்டடத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக சட்டவிரோதமாக கடமையாற்றி வரும் ஆளுநர் பதவி விலக வேண்டும் அல்லது கிஷோரை பதவி நீக்கிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற வேண்டும் என கு. குருபரன் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..