அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
அரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிக்கல் நிலை
இந்த நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களை, காகிதாதிகளை பெறுவது மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பளம் வழங்குதல்
அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பல அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதிலும் கடும் நெருக்கடி நிலை நிலை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அரச சேவையில் உள்ள அதிகப்படியான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயது எனவும் அறிவிக்கப்பட்டது.
அதிகப்படியான ஊழியர்கள்
இந்த நிலையில் அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும்.
எனவே அரச நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது.
பொருந்தாத வேலைகள்
உதாரணமாக அரசாங்கம் 2020இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது. எனினும் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையில் உள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும்.
அத்துடன் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.