அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
இந்த வருடத்தில் எமது வருமானத்தில் ஸ்திரநிலையை அடைந்தால், இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் மேலதிகமாக கொடுப்பனவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம் எனவும் எதிர்காலத்தில் எமது பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் போது, நாம் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தின் புதிய அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் அந்த பதவிக்கான நியமன சான்றிதழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.
மூன்று பீடங்களினதும் மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
வருமான வரி
“எம்மால் இந்ந நிதியுதவி இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது. நிதியுதவி வழங்குவதில் இருந்து விலகினால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எமது நாட்டில் உள்ள நிதியும் அந்நிய செலவாணியும் போதுமானதாக இல்லை.
தற்போதைய முறையில் சென்றால் 2024ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தை முன்நகர்த்த முடியும். நாம் நிதி வழங்குவதாக இருந்தால் 2019ஆம் ஆண்டில் இருந்தவாறு மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீத வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தினர் முதலில் கூறினர்.
அதாவது, தற்போதைய வருமானத்தை 75 வீதத்தால் 3 வருடங்களில் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதுவே எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். இதனை செய்யாவிட்டால் நாளை முதல் எமக்கு வருமானம் கிடைக்காது. இதன் காரமணாகவே நாம் வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அது கடினமானது என்பதை நான் அறிவேன்.
ஒரே தடவையில் அதிகரித்தால் சிரமம் ஏற்படும். ஆனால் இதனை செய்யாவிட்டால் நாம் முன்னோக்கி செல்ல முடியாது. நாம் இதுவரை மேற்கொண்ட அனைத்தும் பின்னோக்கி செல்லும். ஆகவே வரி அதிகரிக்கும் போது வருமான வரியில் இருந்து அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியது.
ஏனைய வரிகளை அதிகரித்தால் ஏற்கனவே சிரமத்தை எதிர்நோக்கியுள்ள வறிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அனைவரும் ஏற்றுகொண்டனர். அங்கு பேச்சுவார்த்தை இடம்பெறும் போது மாதாந்தம் 43000 ரூபாய்க்கு வருமானம் பெறுவோருக்கு வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியது. அதனை செய்ய முடியாது 150000ரூபாய்க்கு மேல் வரி விதிப்போம் என கூறினோம். இறுதியில் 100.000 ரூபாய்க்கு இணக்கம் காண நேரிட்டது.
அரச ஊழியர்கள்
அரசியல்வாதிகள் என்ற வகையில் விருப்பத்துடன் நாம் அதனை செய்யவில்லை. நாட்டை பாதுகாப்பதாக இருந்தால் அதனை செய்யவேண்டியுள்ளது. இதில் உள்ள சிரமத்தை நான் அறிவேன். கடன் பெற்றுள்ளனர். வேறு விடயங்கள் உள்ளன. கல்விக்கு செலவிட வேண்டியுள்ளது. அந்த பிரச்சினை எமக்கும் ஏற்பட்டுள்ளது. வீடுகளை கட்டுவதற்கெல்லாம் கடன் பெற்றுள்ளனர். நானும் வீடு கட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்திடம் நட்டஈடு கோரவில்லை. இந்த கஷ்டங்களை நாம் அறிவோம். ஒரு வருடம் அதனை செய்தால் நாம் முன்னோக்கி செல்ல முடியும்.
எமது வருமானத்தில் ஸ்திரநிலையை அடைந்தால், இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் மேலதிகமாக கொடுப்பனவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். எதிர்காலத்தில் எமது பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் போது, நாம் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
இந்த தகவலை கூறுவது கடினமானது. அரசியல் செய்யும் ஒருவர் இந்த தகவலை கூறுவது கடினமானது, வெற்றியீட்டினாலும், தோல்வியை சந்தித்தாலும் நான் கூற வேண்டியதை கூறினேன். இங்கிருந்து மீட்டெழ வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை நாடாளுமன்றில் வழங்குமாறு நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுகின்றேன்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
