அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரட்ண தலைமையில் நேற்றையதினம் (27) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, மேலதிகச் செயலாளர் நிஷாந்த, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கு
இக் கூட்டத்திற்கு முன்பதாக வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர், இன்றைய கூட்டத்திற்கு தமது இறுக்கமான நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியில் நேரத்தினை ஒதுக்கி மாவட்டத்தின் தேவைப்பாடுகளையும் அபிவிருத்தி முன்னேற்றத்தினையும் ஆராய்வதற்கு வருகை தந்த அமைச்சருக்கும், அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகவுள்ள சாரதி, அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட விபரங்களையும், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விபரங்களையும் விபரமாக அமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளதாகவும், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளதாகவும், இருக்கின்ற நில வளங்களை திறமையாக பயன்டுத்த வேண்டும் எனவும், உற்பத்தி திறன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வகையில் அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும், அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்துவதனை சவாலாக ஏற்றுச் செயற்படுமாறும் தெரிவித்து, இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபராலும், பிரதேச செயலாளர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.











துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
