தேசிய மக்கள் சக்தி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு "ஹந்தயா" (Handaya) எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் ஹோமாகம தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மரண அச்சுறுத்தல்
தவிசாளர் கடந்த 27ஆம் திகதி, நண்பகல் 12.33 அளவில் அலுவலகத்தில் "பொதுமக்கள் தினத்தை" நடத்திக்கொண்டிருந்தபோது, அலுவலக கைபேசி இலக்கத்திற்கு இந்த அச்சுறுத்தல் அழைப்பு வந்துள்ளது.

"ஹந்தயா" என்று அழைத்த நபர், "உனக்கு சனாவுக்கு நடந்ததை தெரியுமல்லவா?" என்று கூறி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக, தலைவர் கடந்த 28ஆம் திகதி பொலிஸில் சமர்ப்பித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சபைத் தவிசாளர் மற்றும் சபைச் செயலாளர் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மேலும், இந்த அச்சுறுத்தல் அழைப்பு சாதாரண தொலைபேசி அழைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அச்சுறுத்தல் விடுத்தவர், தவறுதலாக அழைப்பு விடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ள, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைக் கோரி, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஹோமாகம தலைமையகப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.