அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை முடக்க சதி: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை முடக்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் (02.06.2023) ஆராய சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டதிட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது.
இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகின்றது.
வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருகின்றது.
நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருகின்றது.
ஊடக நிறுவனங்கள்
தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்கு உட்படுத்த சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றது.
அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருகின்றது.
புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |