வடக்கின் அபிவிருத்தி மற்றும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகள், காணி விடுவிப்பு மற்றும் கடற்றொழில் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
இன்று (22.09.2026) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காங்கேசன்துறையில் எண்ணெய்த் தாங்கி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
புனரமைக்கும் பணி
அதேவேளை, நெடுந்தீவு மக்களின் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றும் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் வளைகுடா பிரதேசத்தில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்புத் தாங்கிகளைப் புனரமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதற்கட்ட நடவடிக்கை
உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களால் மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான எரிபொருள் மானியங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக க. இளங்குமரன் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆட்சியாளர்களின் தலையீடுகளின் காரணமாக வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காணிகளையும், யுத்த காலத்தில் விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாததால் காடுகளாக மாறியுள்ள காணிகளையும் மீள மக்களிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.