அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு! முழுமையான உரை
அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிககையில், நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும். இந்த ஆண்டு இறுதியில் வட்டி வீதங்களை குறைக்க முடியும்.
மீள கட்டியெழுப்பும் செயற்பாடு
நான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருகிறோம்.
அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக உள்ளோம்.
இதன் பலன்களை எதிர்வரும் 2 - 3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை
கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நான் சிந்தித்தேன்.
இந்த மாணவ மாணவிகளின் மனங்களில் அவர்களது எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா? சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கைக்கு வந்த பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அன்னையில் எமது நாட்டின் இளைஞர் குழுக்களுடன் கலந்துரையாடினார். அதன் போது பெரும்பாலான இளைஞர் யுவகள், நீண்ட காலமாக இடம்பெற்று வந்த விடயங்கள் காரணமாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையினை இழந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இந்த இளைஞர் யுவதிகளின் மனங்களில் எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா? சுதந்திர தினத்துக்குப் பிந்திய தின ஞாயிறு சன்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விசேட சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
மதீசா உடவத்த இவ்வாறு கூறுகின்றார்.
“நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் என் மனதில் அடிக்கடி உதித்த போதும் எதிர்பார்ப்பின் சியதோர் ஒளிவிளக்கு இன்னமும் என் மனதில் ஒளிர்விடுகிறது. அது இப் பூமிக்கு என்னை சமீபமாக்குகிறது. நான் இன்னமும் இலங்கையை கைவிடவில்லை.”
கிளிபேர்ட் பிரணாந்து இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்.
“நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் எண்ணாத போதும் இலங்கையில மாற்றம் நிகழும் என நான் எதிர்பார்க்கின்றேன். நம் அனைவரதும் மனோபாவங்கள் மாற்றமடைதல் வேண்டும்.நாம் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். சட்டத்துக்கு கட்டுப்படுதல் வேண்டும். மற்றவர்கள் மீது அனுதாபம் காட்டுதல் வேண்டும்.
சிலானி விஜேசிங்க இவ்வாறு கூறுகின்றார்.
”நான் எனது நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். தற்போது நாடு அடைந்துள்ள நிலைமையிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேவை எனக்குள்ளது. இந்த நெருக்கடியான வேளையில், நாட்டுக்கு மனிதவளம் தெதியவசியமான வேளையில் நாட்டை விட்டுச் சென்று நிலைமை சீரான பின்னர் மீண்டும் வருபவர்கள் எனக்குத் தேவையில்லை.”
இக் கருத்துக்களை வாசிக்கின்ற போது அண்மையில் அநுராதபுரத்தில் என்னைச் சந்திப்பதற்கு வந்த இரட்டை சகோதரிகள் எனது ஞாபகத்துக்கு வருகிறது. பல்லேகம ஹேமரதன தேரர் அவர்களுக்கு நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வின் இறுதியில் இந்த இரண்டு சிறுமிகளும் என்னைச் சந்தித்தார்கள்.
அவர்கள் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்கின்றார்கள். அவர்களின் பெயர் நமதி பெரேரா மற்றும் செனுதி பெரேரா. அவர்கள் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள். அப்பாடலின் இறுவட்டு ஒன்றை எனக்குத் தந்தார்கள்.
பாடலின் தலைப்பு – நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். எனது உரையின் பின்னர் அப் பாடலை ஒளிபரப்புமாறு நான் தொலைக்காட்சி ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாணவ மாணவிகள், இந்த இளைஞர் யுவதிகள் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆவார்கள். நாட்டை விட்டுச் செல்லாது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரார்த்தனை செய்யும் எதிர்காள சந்ததியினர் ஆவார்கள். அவர்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவது எமது அனைவரதும் பொறுப்பாகும். இந்த சபையில் உள்ள உங்களுடைய பொறுப்பும் அதுவாகும்.
அனைத்து இலங்கையர்ளதும் பொறுப்பு அதுவாகும். கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, நான் கருத்துக்களை முன்வைத்த சந்தர்ப்பத்தில் நாடு இருந்த நிலைமை பற்றி உங்களுக்கு நினைவிருக்குமென நான் நம்புகிறேன்.
கடந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவினை சமர்ப்பித்த வேளை நாடு இருந்த நிலைமையும், அதேபோல் ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையும் உங்களுக்கு நினைவிருக்கும். பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. பரீட்சைகள் நடாத்த முடியாதிருந்தது.
உரம் இன்றி விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன. விவசாயிகள் நிர்க்கதியாகி இருந்தார்கள். சுற்றுலாக் கைத்தொழில் வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. பத்து பன்னிரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்பட்டது.
எரிவாயு அறவே இல்லாமல் இருந்தது. நகர்ப்புற வீடுகளில் குடியிருப்பவர்கள் உணவு சமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் வரிசைகளில் நாள் கணக்கில் அலைக்கழிய நேரிட்டது. களைப்புற்ற மக்கள் தமது உயிர்களை வரிசைகளில் நின்ற நிலையில் இழந்தார்கள்.
அழுத்தத்தை பொறுத்துக்கொள்ள இயலாமல் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். ஆனாலும் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இத்தகைய அழுத்தங்களை மெது மெதுவாக குறைப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திரத்தன்மையினை அடைந்துள்ளது.
மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளார்கள். அபாயகரமான தொங்கு பாலத்தில் இலங்கைத் தாயை வெகுதூரம் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளது. நாம் அவ்வாறு பயணித்த பாதை இலகுவானது அல்ல. ஆனாலும் பயணம் இன்னமும் முடிவடையவில்லை. வீழ்வதற்கு நெருங்கியிருந்து அரச நிதி முறைமையைப் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணித்தோம்.
அரச செலவினங்களை மட்டுப்படுத்தினோம். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் காரணமாக வரி வருமானம் வீழ்ச்சியடைந்ததனை நாம் அறிவோம்.
2019 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் தொழில்முயற்சிகள், கம்பனிகள் மற்றும் தனிநபர்கள் 16 இலட்சம் பேர்கள் வரி செலுத்தினார்கள். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் வரி செலுத்தும் எண்ணிக்கையினர் 5 இலட்சம் பேர் வரை வரை வீழ்ச்சியடைந்தது. அரசின் வரி வருமானம் படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு விளையும் அழிவினைப் புரிந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு காணப்பட்ட வரி முறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கம் 2022 ஏப்ரல் மாதம் பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான துரித முன்மொழிவுத்திட்டம் ஒன்றை முன்வைத்தது. முன்மொழிவுத்திட்டத்தின் பிரிவு 3.3 இன் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. • உழைக்கும் போதே வரி செலுத்தும் முறைமையினை மீண்டும் அறிமுகப்படுத்தல்.
• அரச தொழில்முயற்சிகளில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்கொள்வோர் ஊடாக அன்றி தனிப்பட்ட ரீதியில் தமது சம்பளத்திலிருந்து வரி செலுத்தல்.
• நிறுத்திவைக்கும் வரி முறைமையினை மீண்டும் அறிமுகப்படுத்தல்.
• அனைத்து வரிவிடுதலைகளையும் இடைநிறுத்தல்.
• வருமான வரி செலுத்த வேண்டிய வருமான மட்டம் மற்றும் பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய புரள்வு எல்லைகளை திருத்துதல்.
ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கமானது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது.
தற்போது நாம் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துகின்றோம். ஆனாலும் இவ்வாறான ஒரு வரிக்கொள்கை தேவை எனத் தெரிவித்தவர்கள் இன்று வரிக்கொள்கையினை விமர்சிக்கின்றார்கள்.
வரி அறவிடுவதற்கான புதியதொரு கொள்கையினை அறிமுகப்படுத்தல் அரசியல் ரீதியாக பிரபல்யம் மிக்கதொரு தீர்மானம் அல்ல. நினைவிற்கொள்ளுங்கள். எனக்குத் தேவை பிரபல்யமடைவதற்கு அல்ல. எனக்குத் தேவை இந்த நாடு அடைந்துள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆகும். ஆம். நான் நாட்டுக்கான பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுப்பேன்.
அத்தகைய தீர்மானங்களின் முக்கியத்துவத்தை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள். வரி செலுத்த வேண்டிய வருமான எல்லையினை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டுமென சிலர் கூறுகின்றார்கள்.
உழைக்கும் போதே வரி செலுத்தும் முறையை நீக்க வேண்டுமென மற்றும் சிலர் கூறுகிறார்கள். நாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை. ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்தவுடன் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
விரும்பாவிட்டாலும் சரியானதைச் செய்ய வேண்டும். உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும்.
வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும். இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும். இவ்வளவு பாரியதொரு தொகையை இழக்கும் நிலையில் நாம் இல்லை.
தற்போது நலிவுற்ற பொருளாதாரத்திற்கு உரிமை கோருவதன் காரணமாக அனைவராலும் வரிச்சுமை பாரியளவில் உணரப்படுவதை நாம் அறிவோம். இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய காரணம் உள்ளது. தற்போது எமது நாட்டில் கூடுதான அளவு வரியினை பொதுமக்களே செலுத்துகின்றார்கள்.
நேரடியாக வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகைப் பணத்தை செலுத்துகின்றார்கள்.
வரி செலுத்துவதற்கு தேவை அற்ற பாரியளவு எண்ணிக்கையினர் தம்மை அறியாமலேயே வரி செலுத்துகின்றார்கள். அத்தகைய வரி மறைமுகவரி என அழைக்கப்படுகிறது.
உலகின் ஏனைய நாடுகளில் கூடுதலான அளவு வரி அறவிடப்படுவது வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் ஆகும்.
இந்தியா நேரடி வரி 67 சதவீதம். மறைமுக வரி 33 சதவீதம். 2021 ல் பங்களாதேஷ் - நேரடி வரி 68 சதவீதம். மறைமுக வரி 32 சதவீதம். நேபாளம் - நேரடி வரி 69 சதவீதம். மறைமுக வரி 31 சதவீதம். 2021 ல் தாய்லாந்து - நேரடி வரி 63 சதவீதம். மறைமுக வரி 37 சதவீதம். 2020 ல் மலேசியா - நேரடி வரி 66 சதவீதம். மறைமுக வரி 34 சதவீதம். 2021 ல் இந்தோனேசியா - நேரடி வரி 60 சதவீதம். மறைமுக வரி 40 சதவீதம்.
ஆனாலும் எமது நாட்டில் நிலைமை அதற்கு மாற்றமானது ஆகும். 2021 ல் எமது நாட்டின் நேரடி வரி 21 சதவீதம். மறைமுக வரி 79 சதவீதம். ஆகவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
அப்போது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும். பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பணவீக்கம் உயர்வடைகிறது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
தொழில்கள் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. தொழில்முயற்சிகள் வீழ்ச்சியடைகின்றன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வாழ்க்கை நடாத்துவது கடினமானதாக உள்ளது. ஆனாலும் இன்னும் ஐந்து ஆறு மாத குறுகிய காலம் இக் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியுமாயின் எமக்கு தீர்வை நோக்கி செல்ல முடியும். இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டுகளில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவினை செலுத்துவதற்கு எம்மால் முடியும்.
தனியார் துறைக்கு சலுகைகளை வழங்க முடியும். முழு நாட்டு மக்களதும் கைகளை இன்று உள்ளதை விடவும் வளமாக்க முடியும். தொழில் மூலமான வருமான மார்க்கத்தை அதிகரிக்க முடியும். வங்கி வட்டிவீதத்தைக் குறைக்க முடியும். மேலும் சுமார் மூன்று ஆண்டுகள் செல்லும் போது இன்று ஈட்டும் வருமானத்தை விட சுமார் 75 சதவீத வருமானத்தைப் பெற முடியும்.
தற்போது அனைத்து கஷ்டங்களுக்கும் மத்தியில் நலிவுற்ற பொருளாதாரம் காரணமாக அவதியுறும் வறுமையில் வாடும் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.
இதற்காக உலக வங்கி எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது. ஆயினும் எமது நாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் முறை உருச்சிதைவுற்றுக் காணப்படுகிறது. அதிக வருமானம் உழைக்கும் நபர்கள் கூட நிவாரண உதவிகளைப் பெறுகின்றார்கள்.
நாம் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். உண்மையான வறுமை சமூகத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். நிவாரண வங்கிக் கணக்கின் ஊடாக அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்த வருகின்றோம். ஆனாலும் சில குழுக்கள் இந்த பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் வரி குறைக்கப்படும் சம்பளம் அதிகரிக்கப்படும் போன்ற கற்பனைக் கதைகளைக் கூறுகின்றார்கள். பல்வேறு முட்டுக்கட்டை போடும் செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். நான் ஒரு போதும் செய்ய முடியாதவற்றைக் கூற மாட்டேன். அதிகாரத்துக்காக பொய் கூற மாட்டேன்.
வரவு செலவுத்திட்ட உரையின் போதும் பாராளுமன்றத்தை திறந்துவைக்கும் போதும் நான் கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்துள்ளது. மறைப் பொருளாதாரத்தில் இருந்து நேர்கணிய பொருளாதாரத்தை நோக்கி நாம் தற்போது பயணம் செய்து வருகின்றோம்.
2023 ஆம் ஆண்டு இறுதியளவில் நேர்கணிய பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். நான் சனாதிபதியாக ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நாட்டின் பணவீக்கம் 70% ஆகும். எமது செயற்பாடுகள் காரணமாக 20203 சனவரி மாதமளவில் அதனை 54% சதவீதமாக குறைப்பதற்கு எம்மால் முடிந்தது.
2023 ஆம் ஆண்டு சனவரி மாதமளவில் அதனை 54 சதவீதம் குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. அதனை தனி இலக்கத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் பாகின்றோம்.
2022 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்தது. அதற்காக உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் பெருமளவு பாடுபட்டார்கள்.
அதே போல் இறக்குமதி செலவினத்தை 18 பில்லியன் டொலர்கள் வரை மட்டுப்படுத்த எமக்கு முடிந்தது. வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்கள் இந்த இக்கட்டான நிலையில் தாய் நாட்டுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குகிறார்கள்.
2022 ஆம் ஆண்டு இறுதியளவில் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய செலாவணியை அவர்கள் எமக்கு வழங்கினார்கள். எமது தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், அவர்களுக்கு பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த ஒரு பின்னணியிலேயே இந்த அர்ப்பணிப்பினை நாட்டுக்காக மேற்கொண்டார்கள். ஆனாலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்புவது நாட்டுக்காக அன்றி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்காக அல்ல என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரையும் நாம் கௌரவிக்கின்றோம். பெரும்பாலும் பூச்சியத்துக்கு வீழ்ந்த எமது அந்நிய செலாவணி ஒதுக்கினை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எமக்கு தற்பொழுது முடிந்துள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது.
வீதிகள் முழுவதும் குறுகிய அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தடைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தார்கள். உலகின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டது. இந்த சனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள்.
அது ஒரு சாதனையான எண்ணிக்கையினர் ஆகும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். கிரேக்கம் சில காலங்களுக்கு முன்னர் எம்மைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
வங்கரோத்து நிலை அடைந்தது. நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைத்து வங்கரோத்து நிலையிலிருந்து மீண்டு மீண்டும் கடன்களைச் செலுத்தும் பலத்தினை ஏற்படுத்துவதற்கு அவர்களுக்கு 13 ஆண்டுகள் சென்றது. அக்கால எல்லைக்குள் மூன்று தடவைகள் ஐஎம்எப் அமைப்பின் உதவி ஒத்தாசைகள் பெறப்பட்டன.
ஆனாலும் நாம் பயணிக்கும் இந்த திட்டத்தின் பிரகாரம் முன்னோக்கிச் சென்றால் 2026 ஆம் ஆண்டளவில் வங்கரோத்து நிலையிலிருந்து எமக்கு மீளுவதற்கு முடியும். நான் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டவாறு நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், எமக்கு அதற்கு முன்னர் இந்த நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
தற்பொழுது நாம் கடன் மறுசீரமைப்புக்காக எமக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். அதற்கு மேலதிகமாக ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள முடியுமான மற்றைய ஒரேயொரு சர்வதேச நாணய திதியம் மாத்திரம் ஆகும். அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் அடித்தளத்தின் பிரகாரம் எமக்கு மேற்கொண்டு முன்னோக்கி பயணிக்க முடியும்.
அது தவிர எமக்கு வேறு எந்தவொரு மார்க்கமும் இல்லை. வேறு மாற்று வழிகள் இருப்பின் அதனை இச்சபைக்கு அறியத் தருமாறு நாம் பயணிக்கும் இந்தப் பாதையினை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன். தற்பொழுது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.
இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். அரசியல் கட்சிகள் என்பதை விட தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இவற்றுள் பெரும்பாலானவை பணத்துக்காக விலைபோன அரசியல் கட்சிகள் ஆகும். புறக்கோட்டை நடைபாதை வியாபாரம் போன்று கட்சிகளையும் அதன் சின்னங்களையும் விற்பனை செய்கிறார்கள். ஒருசில விலை போகின்றன.
இலங்கையின் அரசியல் கட்சிகள் மற்றும் அவை செயற்பட வேண்டிய முறை பற்றிக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். கட்சிகளைப் பதிவுசெய்தல், வெளிப்படைத் தன்மையுடன் செயற்படல், அங்கத்தவர்களின் உரிமைகள், நிதியம் மற்றும் வருமானம் ஈட்டுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்தல், ஊடகப் பயன்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆளமாக ஆராயும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும். இப் பணியின் போது கென்யா, ஜேர்மனி மற்றும் நோர்வே நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பான சட்டம், ஐக்கிய இராச்சியத்தின் வாக்காளர் சட்டம், அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐரோப்பிய முறைமை, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை அடிப்படையாக கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தை மிகவும் சிறந்ததாக மாற்றியமைப்பதற்காக புதிய நிறுவனங்கள், புதிய சட்டவிதிகள் மற்றும் பல புதிய கருத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாறு தொடர்பான நிறுவனம், பொருளாதார விஞ்ஞானம் மற்றும் வியாபார நிறுவனங்கள், மகளிர் மட்டும் ஆண் பெண் பாலினம் தொடர்பான நிறுவனங்களை நாம் புதிதாக தாபிப்போம். அதேபோல் நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்படும்.
அரச மற்றும் அரச கொள்கைகள் தொடர்பான பல்கலைக்கழகம், விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுத் துறை பல்கலைக்கழகம்.
புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
• ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
• பெண்களை வலுவூட்டும் சட்டம்
• சிறுவர் பாதுகாப்பு சட்டம்
• இளைஞர் பாராளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
• போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
• உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
• பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
• தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும்.
அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும். எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது.
ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது. அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
• காலநலை மாற்றச் சட்டம்
• சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
• மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
•உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம், ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
• கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
• முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம். பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
• வருமான அதிகாரச் சட்டம்
• வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
• உணவுப் பாதுகாப்புச் சட்டம்
• அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
• பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
• தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
• புதிய மதுவரிச் சட்டம்
• அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
• புன்வத் சட்டம்
• வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
• டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
• கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
• பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம் இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது.
சமூகத்தை அறிவூட்டும் பிரதான வகிபாகம் ஊடகத்துக்கு உரியதாகும் அதற்காக ஊடகவியலாளர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்கப்படல் வேண்டும்.
1993 இல் நான் பிரதமர் என்ற ரீதியில் ஊடக பயிற்சி நிறுவனம் ஒன்றை தாபித்தல் தொடர்பில் பரிந்துரை பெற்றுக்கொள்வதற்காக கலாநிதி காமினி கொரயா அவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமித்தேன்.
அந்த நிறுவனத்தை தாபிப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற போதும் 1994 பொதுத் தேர்தல் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்குவதற்காக ஊடக நிறுவனம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான நிறுவன முறைமை ஒன்றை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த பல தசாப்த காலத்தை ஆராய்கின்ற போது ஊடகங்களின் வகிபாகம் உரியவாறு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. ஆகவே ஊடக மறுசீரமைப்பு எமது நாட்டுக்கு தேவையாக உள்ளது.
இதன் போது சம்பிரதாய ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகிய இரண்டு துறைகள் பற்றியும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். ஆகவே தான் ஊடகங்கள் தொடர்பிலும் தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
அரச மற்றும் ஊடக கைத்தொழில் ஆகியன ஒன்றிணைந்து கூட்டு சுய ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று பற்றி கவனம் செலுத்துவது முக்கியமானதென நான் கருதுகின்றேன். இணைய அவகாசத்தில் பொய்யான செய்திகள், வெறுப்பூட்டும் வெளியீடுகள், பிழையான தகவல்கள், சிறுவர் மற்றும் பெண்கள் துன்புறுத்தல்கள், தொந்தரவுகள் மாத்திரமன்றி மோசடிகள் மற்றும் ஊழல்களையும் நாம் அனுபவித்து வருகின்றோம்.
இது தொடர்பாக சமூக ஊடக வலையக் கம்பனிகள் உள்ளடங்களாக தெட்டத் தெளிவான ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று தேவைப்படுவதாக நாம் கருதுகின்றோம்.
நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான ஒரு விடயம் யாதெனில், கொள்கை தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது ஆகும். அரசாங்கங்கள் மாறுகின்ற போது மாற்றமடையாத தேசிய கொள்கை.
அமைச்சர்கள் மாற்றமடையும் போது மாற்றமடையாத தேசிய கொள்கை. உலகத்தின் அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளும் நிலையான கொள்கைகளின் ஊடாக முன்னோக்கிச் சென்ற நாடுகளாக காணப்படுகிறது.
காலத்துக்கு ஏற்றவாறு கொள்கைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் அரசாங்கங்கள் மாற்றமடைகின்ற போது கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட மாட்டாது. இது முறைமை மாற்றத்துக்கான ஆரம்பம் மாத்திரம் ஆகும்.
மேலும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இலங்கையர்களின், விசேடமாக இளைஞர் யுவதிகளின் கருத்துக்கு அமைய அந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நாம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
அந்த கோரிக்கையினை இந்த சபையில் உள்ள உங்களிடம் மாத்திரம் நான் முன்வைக்கவில்லை.
ஒட்டுமொத்த இலங்கையர்களிடத்திலும் முன்வைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் உங்களது கருத்துக்களை முன்வைக்கவும். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையுங்கள்.
இன்று இந்த நாட்டில் உள்ள பலருக்கு இன்று நாடு அடைந்துள்ள நீளம், அகலம், ஆழம் புரிவதில்லை.
அது நாம் அனைவரும் வாழ்நாளில் இவ்வாறான ஓர் அபாயத்தை மற்றும் பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுக்காமையினால் ஆகும்.
இந்த நெருக்கடியிலிருந்து விரைவாக மீளுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டுனெ நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், அறிஞர்கள், தொழில் வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்ற அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக இணைதல் வேண்டும்.
குறிப்பிட்ட சில காலம் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவுகள் எட்டப்படல் வேண்டும். சமூக இணக்கப்பாடு ஏற்படுத்தப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.


































உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
