நாட்டில் வாகன சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை
நாட்டில் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே.சேனாதீர கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (29.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்கு பிரதான காரணம்.
இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.
விபத்துக்களுக்கான காரணம்
குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும்.
அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |