ஆர்ப்பாட்டகாரர்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் ஒற்றர்கள்: உபுல் சாந்த எச்சரிக்கை
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் காலி முகத் திடலில் மக்கள் நடத்தும் போராட்டத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாக மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் என கருதப்படும் உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.
சன்னஸ்கல தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ள காணொளி பதிவில் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்காக நேற்றிரவு சாராயத்த ஏற்றிய சுமை ஊர்தி வந்தது எனவும் அவர் கூறியுள்ளார். வெளியில் அனுப்பி வைக்கப்படும் சாராயத்தில் விஷம் கலந்து இருக்கலாம். கவனமாக இருங்கள். மோதல்களுக்கு செல்ல வேண்டாம்.
ஆளும் தரப்பு தோல்வியை ஒப்புக்கொண்டு நாட்டை சிவில் நாடாக மாற்ற முனையாது. போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, சீர்குலைக்க முயற்சிக்கும். இதுவரை அமைதியாக வன்முறையின்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அது தொடர வேண்டும். சதித்திட்டங்களுக்கு சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆர்ப்பாட்டகாரர்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் ஒற்றர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைத்து இரகசிய தகவல்களையும் அரசாங்கத் தரப்புக்கு வழங்கி வருகின்றனர்.
இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமக்கு அருகில் இருக்கும் அனைவரையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மோதல்களுக்கு செல்லாது உங்களது செல்போன் கெமராக்களை மட்டும் பயன்படுத்துங்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மக்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.



