தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்: ஜோசப் ஸ்டாலின் கருத்து
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு முன்வர வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (11.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களது உறவினர்களால் 2000 நாட்களுக்கு மேலாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
அதிகார பரவலாக்கம்
இந்தப் போராட்டத்திற்கான முடிவு என்ன? இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு என்ன? அது தொடர்பாக இந்த அரசு தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் என்ன செய்தார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால், தற்போது உள்ள ஜனாதிபதி இவற்றினை செய்ய வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் இடம்பெற வேண்டும். 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் அது தொடர்பாக இந்த அரசாங்கம் இதுவரை முடிவு சொல்லவில்லை.
13இனை அவர்கள் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று கூட சொல்லவில்லை. இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் 13ஆவது சீர்திருத்தத்தை எதிர்த்திருந்தனர்.
பொருளாதாரப் பிரச்சினை
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் குறைந்த அளவு வாக்கினையே ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு வழங்கியிருந்தனர்.
அதற்குக் காரணம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு உறுதியான ஒரு தீர்வு அவர்களிடம் இல்லை என்பதே என நாங்கள் நினைக்கின்றோம். பொருளாதாரப் பிரச்சினையை என்பது நாட்டில் எல்லோருக்கும் இருக்கின்றது.
பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்தால் எல்லாம் சரி என்பதற்கு அப்பால் சென்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியம். இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் அதற்காகவும் குரல் கொடுப்போம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |