விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
விடுதலை புலிகள் அமைப்பினரிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசை கோரியுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவரும் ஐக்கிய காங்கிரஸ் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பினரிடமிருந்த நகைகள்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
1990 ஆம் ஆண்டு வடக்கில் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்த முஸ்லிம்களை இன ரீதியாக பிரித்து விடுதலைப்புலிகள் அந்த மக்களின் அனைத்து சொத்துக்களையும் ஆயுத முனையில் பறிமுதல் செய்து வெளியேற்றியது யாவரும் அறிந்ததே.
இதன் போது வடமாகாண முஸ்லிம்களின் ஒட்டுமொத்த உடமைகளையும் பறித்து எடுத்து விட்டு உடுத்திய உடையுடன் வெளியேற்றப்பட்ட போது பெண்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கைகளில் மறைத்து கொண்டு வருவதற்கு இருந்த நகைகளையும் குறிப்பாக சிறுமிகளின் காதுகளிலும் கழுத்துகளில் இருந்த நகைகளைக் கூட கழற்றி எடுத்து விட்டே துரத்தினர்.
அதன் பின் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த பெருந் தொகையான நகைகளை அரச படையினர் கைப்பற்றி அதனை தாம் கொள்ளையடிக்காது அரசாங்கத்திடம் ஒப்படைத்தது பாராட்டத்தக்க செயலாகும்.
முஸ்லிம்கள்
அந்த நகைகள் நீதிமன்ற உத்தரவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்து தற்போதைய அரசு பொலிஸாரின் பாதுகாப்பில் பரிசீலனைக்காக கொடுக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை இழந்த மக்கள் உரிய ஆதாரங்களை காட்டினால் வழங்கப்படலாம் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
என்றாலும் அதிகமான முஸ்லிம்களிடம் எந்த வித ஆதாரமும் இல்லை என்பதுடன் நகைகளை பறி கொடுத்த பலர் மரணமடைந்து விட்டனர்.
இவ்வாறான நிலையில் பெருமளவில் இழந்த முஸ்லிம்களின் நகைகளை அரசு நியாயமான முறையில் ஆய்வு செய்து முஸ்லிம்களுக்குரிய நகைகளை மதிப்பீடு செய்து அவர்களிடம் இதற்கான சத்திய பிரமாண கடிதம் பெறப்பட்டு வழங்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |