அரசாங்கம் சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்ட வேண்டும் - சஜித் பிரேமதாச
அரசாங்கம் சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சுகாதார நெருக்கடி நிலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கி வரும் அனர்த்தங்களில் பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இவ்வாறான ஓர் நடவடிக்கையை எடுப்பதற்கு இன்னுமும் ஆயத்தமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு வெளிப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் எரிபொருள் கையிருப்பு காலியாகி வருவதாகவும் எதிர்காலத்தில் நெருக்கடி நிலைமை உருவாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு மற்றும் பால் மா கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பிரச்சினை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய பிரச்சினைகளினால் நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.