அரிசி விலை அதிகரிப்பு: அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் அமைச்சர்
அரிசி மாஃபியாவை இல்லாமல் செய்வோம் எனக் கூறியவர்கள் இன்று அரிசி விலையை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva ) குற்றஞ் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் குறித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இறக்குமதி உணவுகளுக்கான வரி நீக்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுக்குமான வரி
அவர் மேலும் தெரிவிக்கையில், “பாதீட்டில் உள்ள 3 விடயங்களைப் பற்றிக் கதைக்கிறேன். உணவுகள் மீதான வரி நீக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி விசேட வர்த்தக பண்ட வரி அனைத்து இறக்குமதி உணவுக்குமான வரி தொடர்ந்தும் அறவிடப்பட்டுச் செல்கின்றது.நீக்குவதாக கூறியதைத் தொடர்ந்து அறவிட்டுச் செல்கின்றீர்கள்
ஒரு மணித்தியாலத்தில் அரிசி மாஃபியாவை இல்லாமல் செய்தாக கூறினீர்கள். டிசம்பர் மாதம் நாட்டரிசி 220 ரூபாய், சம்பா அரிசி 230 ரூபாய் எனத் தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
விலை அதிகரிப்பு
விலை குறைப்பதை விட்டு விலை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நாட்டரிசிக்கும், சம்பா அரிசிக்கும் 230, 240 ரூபாய் என அறவிடப்பட்டது. குறைப்பதாகக் கூறிவிட்டு அதிகரித்துவிட்டார்கள். மத்திய வங்கி நாளாந்த விலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது.
நேற்று புறக்கோட்டையில் ஒரு கிலோ நாட்டரிசி 250 ரூபாய், சம்பா அரிசி 260 ரூபாய் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |