சகல துறைகளிலும் அரசு படுதோல்வி : நாடாளுமன்றத்தில் சஜித் விமர்சனம்
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறை, மலையக தோட்டத் தொழிலாளர் சமயம், சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து
நாடாளுமன்றத்தில் நேற்று(21) ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, "தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையாகப் பெற்றுத் தருவதாகக் கூறிய அரசு, இன்று விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் 120 ரூபாவுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முற்பட்டுள்ளது.

விவசாய அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று கூறியவர்கள், இன்று அவர்களைப் பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, அவர்களைக் காணி மற்றும் குடியிருப்புகளில் இருந்து விரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ராகல லெனார்ட் தோட்டத்தில் நீண்ட காலமாக வழ்ந்து வந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் காணி உரிமையையும் சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதாரத்துறையின் மௌனம்
நாட்டில் டெங்கு தொற்றுநோய் வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரை 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலைமை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ள போதிலும், இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. மேலும், டெங்கு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பாரம்பரிய சுதேச மருத்துவத் துறை கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 700 மாணவர்களுக்கான பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலவச பாரம்பரிய வைத்திய பயிற்சிக்காக இயங்கிய 11 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு மருந்துகளை இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி இழக்கப்படுவதுடன், பாரம்பரிய மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் அவசியமாகும்.
தொகுதி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை தேசியப் பாடசாலைகளில் பிரதான மற்றும் கட்டாயப் பாடங்களாக மாற்ற வேண்டும். அதற்கான காலச் சட்டகத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.