இசைக் கச்சேரியில் மாயமான 500 தலைக்கவசங்கள்! பொலிஸார் விசாரணை
ஹொரணை பொது மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்கள் சுமார் ஐநூறு பேரின் தலைக்கவசங்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ள விடயம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் ஹொரணை பொது மைதானத்தில் இன்னிசைக் கச்சேரி ஒன்று நடைபெற்றுள்ளது.
அதன் போது இன்னிசைக் கச்சேரியைப் பார்வையிட வந்தவர்கள் வாகனங்களுக்கான தரிப்பிட கட்டணம் அறவிட்ட பெண்ணொருவரிடம் தங்கள் தலைக்கவசங்களை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை
கச்சேரியைக் காண வந்த குழுவினர், கச்சேரி முடிந்த பிறகு தலைக்கவசங்களைத் திரும்பப் பெற அவர்கள் வந்தபோது, அந்த இடத்தில் இருந்த பெரும்பாலான தலைக்கவசங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஹொரணை தலைமையக பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொலிஸாருக்கு ஏற்கனவே 70இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.
தலைக்கவசங்களைப் பெற்றுக்கொண்ட ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒரு விரிவான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.