கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! பின்னணியில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மூவர் கைது
இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது. இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விசாரணை அதிகாரிகள்
அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.