கடற்றொழில் வருமானத்தை 3 மடங்காக அதிகரிக்க அரசின் திட்டம் : எதிர்க்கட்சியின் வாதத்தை முறியடித்த அமைச்சர்
இலங்கையின் கடற்றொழில் துறையை நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் துறைகளில் ஒன்றாக மாற்றுவதுடன், 2030ஆம் ஆண்டளவில் இத்துறையின் ஏற்றுமதி வருமானத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் கீழ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தொடர்பான விவாதம் நேற்று(27.11.2026) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
அதில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
700 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட கடற்றொழில் அமைச்சையும் அதன் கீழுள்ள நிறுவனங்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்குப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், தற்போது அந்தச் சவால்களைக் கடந்து துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடிந்துள்ளது.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடற்றொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் 285 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட நிலையில், தற்போது அது 320 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இதனை 2030ஆம் ஆண்டளவில் குறைந்தது 600 முதல் 700 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிலைக்குக் கொண்டுசெல்வதுடன், இத்துறையைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடற்றொழில் அமைச்சின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை கணிசமான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2027 வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு
2023ஆம் ஆண்டு 7,000 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு, 2024ஆம் ஆண்டு 10,000 மில்லியன் ரூபாவாகவும், 2025ஆம் ஆண்டு 10,668 மில்லியன் ரூபாவாகவும், 2026ஆம் ஆண்டு 16,635 மில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்காக 24,024.50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பயனாகவே இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், இதன்மூலம் கடற்றொழில் துறையின் அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பும் இராஜதந்திர உறவுகளும் இல்லை என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை.
இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன. சர்வதேச உதவித் திட்டங்கள் ஊடாக 5,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான உதவிகள் கிடைத்துள்ளன.
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri