அரசின் புதிய சட்டமூலம் அடக்குமுறையின் உச்சம் - காரைதீவு தவிசாளர் காட்டம்
அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது எனக் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் கடுமையாக எச்சரித்தார்.
காரைதீவு பிரதேச சபையின் எட்டாவது அமர்வு இன்று (16.02.2026) நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட தவிசாளர் சு. பாஸ்கரன், பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுக் கலந்துரையாடல்
இந்தச் சட்டம் கொண்டு வரப்படுமாயின் அது அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும், குடிமக்களின் உரிமைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்காமல் அவசரமாக முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஏலவே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு எத்தகைய பாரிய சவால்களை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்க முடியாது. அப்படி இருக்கையில் புதிய சட்டம் மோசமாக இருக்கின்றது.
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் ஒன்றுபட்ட நிலைப்பாடு அவசியம்." - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளமை சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

