பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரச நிதி.. அதிகாரி ஒருவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை
தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, ஒரு பிரிவு மேம்பாட்டு அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, தண்டனையை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க உத்தரவிட்டார்.
அத்துடன், குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.
பாலியல் லஞ்சம்
20,000 ரூபாய் அபராதத்தையும் அவர் குற்றவாளிக்கு விதித்தார். ஒரு அரசாங்க அதிகாரியாக, குற்றவாளியாக காணப்பட்டவர், தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்படக்கூடிய ஒரு பெண்ணிடமிருந்து பாலியல் லஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதன்போது, குற்றத்தின் தீவிரத்தை எடுத்துரைத்த நீதிபதி, குறைந்த தண்டனைக்கு இடமில்லை என்றும் கூறினார். இந்த சம்பவம் 2015 மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்றது குறித்த அரச அதிகாரி தேவையான நிதி உதவியை அங்கீகரிப்பதற்காக, பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் அவர் அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு விருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார், அங்கு லஞ்ச ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் அவர்; கைது செயயப்பட்டார்.
இந்தநிலையில், விரிவான விசாரணைக்குப் பிறகு, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்தே மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனையை விதித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |