வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வெடிக்கும் தொழிற்சங்கப் போராட்டம்! நாளை முடங்கப்போகும் அரச சேவைகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
இதன்படி, பல்வேறு நிறைவேற்று சேவைப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க நிறைவேற்று சேவைகளில் தெரிவு செய்யப்பட்ட சில பிரிவுகளுக்கு மாத்திரம் கொடுப்பனவு அதிகரிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும், தமது கூட்டுக் குழுவின் கீழ் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 20 நிறைவேற்று சேவைப் பிரிவுகளின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொடுப்பனவு அதிகரிப்பில் காணப்படும் இந்தத் தெரிவுசெய்யப்பட்ட அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டுக் குழுவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
20 ஆசிரியர் தொழிற்சங்கங்கள்
ஆசிரியர்கள், அதிபர்களும் போராட்டம் இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி தனியான போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு கோரி வருவதாக தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழு பிரதான அதிபர் சங்கங்களும் சுமார் 20 ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஏற்கனவே இந்த விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், முன்மொழியப்பட்ட இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.