ஹசீனாவின் வருகைக்கு முன்பே பற்றி எரியும் பங்களாதேஷ்! யூனுஸின் வீடு தீக்கிரை
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் மீண்டும் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், பங்களாதேஷின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், முன்னாள் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸின் பூர்வீக வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, நாடு முழுவதும் இன்று (நவம்பர் 19) முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஹசீனாவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் உச்சக்கட்டமாக இந்த முடக்கப் போராட்டம் அமைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோபால்கஞ்ச் மற்றும் பரீத்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் படையின் 97 படைப்பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஷரிபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
⚡JUST IN 🇧🇩🚨 🔴 Bangladesh : Last night unknown mob Torched the ancestral Home of Muhammad Yunus in Chittagong (চট্টগ্রাম) Karma catches up mdc. https://t.co/z5eMPCGHFI
— THEINTEL24X7 (@THEIntel24x7) November 19, 2026
இதற்கிடையில், தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தென்கிழக்கே அமைந்துள்ள சிட்டகொங் நகரில், முஹம்மது யூனுஸின் பூர்வீக வீடு புதன்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத தரைத்தள அறையொன்றுக்குள் எரியக்கூடிய பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி பஞ்சலைஷ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மொஸம்மல் ஹக் தெரிவித்துள்ளார்.
எனினும், வீட்டின் மேல் தளங்களில் வசிக்கும் யூனுஸின் தந்தை வழிக் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் வன்முறைகள்
கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின்போது, குறைந்தது 28 மாவட்டங்களில் பல குண்டுவெடிப்புச் சம்பவங்களும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில் பல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டத்தின்போது இடம்பெற்ற உயிரிழப்புகளுக்குக் காரணமான ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உள்ளூர் நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்திருந்தது.
இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
2024 ஒகஸ்ட் மாதம் பதவி விலகக் கோரி முன்னெடுக்கப்பட்ட வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து வெளியேறிய ஹசீனா, அண்டை நாடான இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
தீ வைக்க முயற்சிக்கும் தாக்குதல்கள்
இதேவேளை, 2024ஆம் ஆண்டு போராட்டங்களின்போது இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் கல்வி அமைச்சர் நூருல் இஸ்லாம் நாஹித், வியாழக்கிழமை டாக்காவில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மொஹம்மட் காலித் மன்சூர் தெரிவித்துள்ளார்.
மேலும், முஹம்மது யூனுஸால் நிறுவப்பட்ட கிராமீன் வங்கியின் குறைந்தது 37 கிளைகள் மற்றும் அலுவலகங்கள் மீது நவம்பர் 10ஆம் திகதி முதல் தீவைப்பு அல்லது தீ வைக்க முயற்சிக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மேலும் 14 கிளைகள் தாக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள அவாமி லீக் தலைவர்கள், பங்களாதேஷைச் சீர்குலைக்கவும் சொத்துகளுக்குத் தீ வைக்கவும் தமது ஆதரவாளர்களைத் தூண்டுவதாக உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், தலைமறைவாக உள்ள அவாமி லீக் தலைவர்களைத் தொடர்புகொண்டு கருத்துகளைப் பெற முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.