15 நாட்களுக்கு பணம் இன்றி துயரமடையும் அரச ஊழியர்கள்! தீர்வில்லை என குற்றச்சாட்டு
அரசு முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் ரிபான் தெரிவித்தார்.
குறிப்பாக அரச ஊழியர்கள் மாதத்தில் 15 நாட்களில் பணம் இன்றி கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசு முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை அவதானிக்கின்றபோது, அது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது. நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமை
கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 20 ஆயிரம் ரூபா வரையிலான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கும், பாடசாலை மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய புத்தகங்கள் மீதான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமைக்கும் அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு - செலவுத் திட்டத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருந்த போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பல்வேறு பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேக்கரிப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாரிய பொருளாதாரச் சுமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மின்சார இணைப்பைத் துண்டிப்பதற்கான கட்டணமாக 800 ரூபா எதற்காக அறவிடப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்பதால் அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
அரசு ஊழியர்களின் மாதாந்தச் சம்பளம் முதல் 15 நாள்களுக்குள்ளேயே முடிவடைந்துவிடுவதால், மீதமுள்ள 15 நாட்களையும் கடன்களைப் பெற்றுக்கொண்டே கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உலகளாவிய மகிழ்ச்சி அறிக்கையின்படி, 143 நாடுகளில் இலங்கை 134ஆவது இடத்தில் காணப்படுவதிலிருந்து மக்கள் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியற்ற நிலை தெளிவாகின்றது.
சாதாரண அரச ஊழியர் ஒருவரின் மாதாந்தச் சம்பளம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபா வரையே காணப்படுகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று பணியாற்றும் அரச ஊழியர்கள் போக்குவரத்துக்காக மாதாந்தம் சுமார் 20 ஆயிரம் ரூபாவும், பணியிடங்களில் தங்கியிருந்து பணியாற்றுவோர் உணவுக்காக மேலும் 20 ஆயிரம் ரூபாவும் செலவிட வேண்டியுள்ளது.
இரு தேவைகளுக்கும் மாத்திரம் 40 ஆயிரம் ரூபா செலவாகும்போது, அவர்களின் கைகளில் எதுவுமே எஞ்சாத நிலையே காணப்படுகின்றது.
நாடொன்று பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகும். ஆனால், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அண்மையில் நான் பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு தூதுவர்களைச் சந்தித்துப் பேசியபோது, இலங்கைக்கு வருவதிலும் முதலீடு செய்வதிலும் பல சிரமங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.