அரச ஊழியர்களின் சம்பளம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
நேற்றையதினம்(11.05.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா அகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதலில் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாம் மறந்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த விடயம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒன்றாகும். இரண்டாவதாக தேர்தல் சட்டம் என ஒன்று நடைமுறையில் உள்ளது.
அது நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய சட்டம். அந்த வகையில் இந்த விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு இணங்கவே நாம் செயற்பட முடியும்.
தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட முடியும்
அதன்பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் நிபந்தனையின் படியே அரச ஊழியர்கள் கடமைக்கு செல்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் தேர்தல் ஆணைக்குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த செயற்பாடுகளை மேற்கொண்டோம். தற்போது பெருமளவானோருக்கு இந்த நிவாரணம் கிடைத்துள்ளது. சில இடங்களில் சிக்கல்கள் இருக்கலாம். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டது போல் நாம் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். தாம் போட்டியிடும் தேர்தல் தொகுதிக்கு வெளியே அண்மையில் உள்ள பிரதேசத்தில் கடமைக்கு செல்லுமாறு நாம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தோம்.
சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு அவ்வாறு கடமைக்குச் சென்றால் போதும். அவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படும் இடம் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேசி அதனை தீர்க்க முடியும்.
எவ்வாறெனினும் முழுமையாக தேர்தல் சட்டத்திற்கு மாறாக செயற்பட முடியாது. எமது தனித் தீர்மானத்தால் அவ்வாறு செயற்படவும் முடியாது. வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்கள் விடுத்த அனைத்து வேண்டுகோள் தொடர்பிலும் நாம் தேர்தல் ஆணைக்குழுவுடன் அவ்வப்போது கலந்துரையாடியுள்ளோம். இதில் எந்த அரசியல் பிரச்சினையும் கிடையாது.
நேற்று முன்தினம் இரவும் அது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம் அதற்கிணங்க நாம் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஒன்றை எடுப்போம்.
அத்துடன் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை அவர்களுக்கான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதும் கடமையை மேற்கொள்வதற்கான அலுவலகம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும்.
இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மீண்டும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இவ்வாறு 80,000 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களின் 3000 பேருக்கே பிரச்சினைகள் இருந்தன.
தற்போது அது பெருமளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எல்லோருக்கும் இந்த பிரச்சினை கிடையாது. அதனால் இதனைப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் இணைந்து இதற்கு தீர்வு பெற்றுக் கொள்வோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |