மூன்று பெரும் விம்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கம்: கோவிந்தன் கருணாகரம்
மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa), கோட்டாபய ராஜபக்ஷ ( Gotabaya Rajapaksa), பௌத்த சிங்கள பேரினவாதம் எனும் மூன்று பெரும் விம்பங்களால் தான் இந்த அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govindan Karunakaram) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரு வருட காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ எனும் இரு பிம்பங்கள் கொண்ட தூண்களும் ஆட்டம் காணத் தொடங்க நான்காவது தூணின் அவசியம் உணரப்பட்டு, எண்ணை விலை உணர்வு என்ற நாடகம் மூலம் பசில் ராஜபக்ஷவினை நாடாளுமன்ற உறுப்பினராக்கி நிதி அமைச்சர் என உயர்த்தி அரசைத்தாங்கும் நான்காவது தூணாக நிறுத்த முனைந்தது.
அலாவுதீனின் அற்புத விளக்கோடு பொருளாதார அற்புதங்களையும் நிகழ்த்துவார் என்ற பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நாடாளுமன்றம் வந்து நிதியமைச்சராகி இன்று இந்த வரவு செலவுத்திட்டத்தினை வெற்றுப் பானையாக வெறும் எழுத்துக்களுடனும், இலக்கங்களுடனும் சமர்ப்பித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்கட்சியினர் மாத்திரமல்ல நடுநிலை நின்று ஆய்வு மேற்கொள்ளும் பொருளாதார நிபுணர்கள் வர்த்தகர்கள், பொது மக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே தத்தமது துறைகளில் உப்புச்சப்பற்ற வரவு செலவுத்திட்டம் என்றே உரைக்கின்றனர், விமர்சிக்கின்றனர்.
அரச அமைச்சர்கள், அரசின் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது வரவு செலவுத்திட்ட உரை மீது தமது விமர்சனத்தினை முன்வைத்து வருகின்றனர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் மீதான எனது உரை, பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் மீதானதாகும்.
இந்த அமைச்சுக்களுக்கான மொத்த ஒதுக்கீடு வரவு செலவுத்திட்டத்தின் மொத்தச் செலவீனத்தின் 19.56வீதமாகும்.இது ஏறக்குறைய வரவு செலவுத்திட்டத்தின் ஐந்தில் ஒரு பங்காகும்.
உலக வல்லரசாகவும் உலக யுத்த வலுச்சமநிலையை தக்க வைப்பதும் உலக பொருளாதார நிலைமையினை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 39 சதவீதமாகும். இது உலக அரங்கில் அந்நாட்டின் நிலை பொறுத்து ஏற்கத்தக்கதேயொழிய, வியக்கத்தக்கதல்ல.
தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனவும் தென்னாசியாவின் அரசியல் பொருளாதார வெளி விவகாரங்களைத் தீர்மானிக்கும் இந்தியாவின் 2020-21ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனங்களுக்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 14.5 வீதமாகும்.
இத்தனைக்கும் இந்தியா தனது இருபுற எல்லைகளிலும் யுத்த நிலைமையினை நித்தமும் எதிர்கொள்ளும் ஒரு நாடாகும்.பிராந்திய வல்லரசான இந்தியாவோடு நித்தமும் முட்டிமோதுவது மாத்திரமன்றி நாடு உருவான காலம் முதல் இந்தியாவோடு பகைமையினை வெளிக்காட்டும் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புச் செலவீனமோ 2021ஆம் ஆண்டில் அதன் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் 18.4 வீதமாகும்.
இவை உலக நாடுகள் பாதுகாப்புச் செலவீனங்கள் தொடர்பான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று சிறிய உதாரணமேயாகும்.
எமது நாட்டின் தற்போதைய நிலைமையில் அதாவது, உலகளாவிய கோவிட்- 19 பெருந்தொற்று அவலம், அது ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி, அதிலிருந்து மீள முடியாத எமது அரசின் தவறான கொள்கைகள், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் துறை, திட்டமிடாத முறையில் ஒரே மூச்சில் மேற்கொள்ளப்பட்ட சேதன உரக் கொள்கையினால் பெருந்தோட்ட விவசாயம், நெல் உற்பத்தி, உப உணவு உற்பத்தி என்பன வீழ்ச்சியடைந்து சோமாலியா போல் மாறுவது தவிர்க்க முடியாத ஒரு நிலை.
சென்மதி நிலுவை பற்றாக்குறை, டொலர் நெருக்கடி, வானைத் தொடும் அளவுக்கு விலைவாசி உயர்வு, இவற்றை திட்டமிட்ட முறையில் தீர்ப்பதற்கான எந்தவிதமான தீர்க்க தரிசனம் கொண்ட முன்மொழிவுகள் இல்லாத இந்த வரவுசெலவுத்திட்டத்தில், ஒட்டு மொத்த பாதுகாப்புத் துறைகளுக்கு நாட்டின் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கினை ஒதுக்கீடு செய்வது அவசியமா?. அல்லது இதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?
இன்று எமது நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளதா?. அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படலாம் என்ற ஆதாரபூர்வ புலனாய்வுத் தகவல் உள்ளதா?
தாக்குதல் நடக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தும் கூட அந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியாத ஒரு நாட்டுக்கு இந்தளவு பாதுகாப்புச் செலவீனம் தேவைதானா?
உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலத்தில் அந்த யுத்தத்திற்கான காரண காரியம் உணராது அதன் தார்ப்பரியம் புரியாது, போராடியவர்கள் நம்நாட்டவர்கள் என்பதையும் உணராது பேரினவாத முனைப்பில் யுத்தத்தை நடத்தினீர்கள்.
அதற்காகப் பாதுகாப்புச் செலவீனத்தை உயர்த்தினீர்கள். பாதுகாப்புத்துறையின் மூலதனச் செலவீடு அதிகரித்துச் சென்றது.அதனையொட்டி அதற்கான நடைமுறைச் செலவுகளும் அதிகரித்துச் சென்றது.
எம்மால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உங்கள் பார்வையில், நீங்கள் அதனை நியாயப்படுத்தினீர்கள்.ஆனால் இன்று இந்த அளவு பாதுகாப்புச் செலவீனம் அதிகரிப்பதற்கு நீங்கள் எந்த நியாயத்தைக் கற்பிக்கப் போகின்றீர்கள்.
அரசாங்கத்தின் தேவை ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுதல்.பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிகொண்டோம் என்று பெருமை பேசிய நீங்கள் இன்று பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மையினரால் படுமோசமாக விமர்சிக்கப்படுகின்றீர்கள்.
இன்று உங்களுக்குத் தேவை இந்த நாட்டில் மீண்டும் பேரினவாதிகளின் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றேயாகும்.
அதற்காக இல்லாத பயங்கரவாதத்தை இல்லாத இனத்துவ வாதத்தை இல்லாத மொழிப்பிரச்சினையினை இருப்பதாகக் காட்டி அமைதியாக வாழும் பௌத்த சிங்கள, பௌத்த கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்களிடையே பகைமையினையும், பிணக்கினையும் ஏற்படுத்த முயல்கின்றீர்கள்.
மத முரண்பாடு, இன முரண்பாடு, மொழி முரண்பாடு என்பவற்றை ஏற்படுத்தி அதன் நெருப்பில் குளிர் காய்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைப்பதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
இதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக கிளர்ந்தெழும் மக்களை பாதுகாப்புத் துறை கொண்டு நசுக்க முயல்கின்றீர்கள்.இதற்காகவா பாதுகாப்புத் துறைக்கு இந்தளவு நிதியினை ஒதுக்கியுள்ளீர்கள்.
சொந்த நாட்டு மக்கள் மீதா உங்கள் பாதுகாப்பு பலத்தினைப் பிரயோகிக்க முயல்கின்றீர்கள்.இதற்காகவா, இத்தனை பாதுகாப்புச் செலவினை ஒதுக்கியுள்ளீர்கள்.
நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை ஆட்சியாளர்களான நீங்கள் விரும்பவில்லை.யுத்தம் நடைபெறும் நாடொன்றில் இரு தரப்புக்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது என நீங்கள் கூறுகின்றீர்கள்.அவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்புக்களை நினைவுகூருவதற்கு ஒரு தரப்புக்கு மாத்திரம் மறுக்கப்படுகின்றது.
மீண்டும் ஒரு இருண்ட யுகம் போல வெள்ளை வான் மாத்திரம் இல்லாது ஊடக அடக்கு முறையும் ஆரம்பமாகிவிட்டது.இதையெல்லாம் இருப்பதாகக் காட்டிக் கொண்டால்தான் பேரினவாதிகளின் பேராதரவு உங்களுக்கு இருக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை மேற்கொள்கின்றீர்கள்.
கோவிட் - 19 பெருந்தொற்றினை உங்களது தவறான கொள்கைகளால் கட்டுப்படுத்த முடியாது தமது உயிரினைக் கூட துச்சமென மதித்து கடமையாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களைக் கொண்ட சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு 6.13 வீதம்.உற்பத்தித் துறைக்கு முக்கிய பங்களிக்கும் விவசாயத்துறைக்கு 0.97 வீதம்.
ஒட்டு மொத்த பாதீட்டு ஒதுக்கீட்டை நோக்கும் போது இது மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த பாதீடாக நோக்க முடியவில்லை.சில ஒதுக்கீடுகளின் அதிகரிப்பினை நோக்கும் பொழுது அது பேசன்ரேஜ் பெறுவதற்கான ஒதுக்கீடாகவே நோக்க முடிகின்றது.
ஒரு வகையில் இது மக்கள் நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, ஆட்சியாளர்களுக்கான பேர்சன்ரேஜ் பாதீடு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்தாகும்.
பாதுகாப்புத் தொடர்பாக நான் கூற விரும்புவது இந்து சமுத்திரத்தில் நமது நாட்டின் கேந்திர மையம், பிராந்திய ஒத்துழைப்பு, பிராந்திய அபிவிருத்தி, மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பாக நம் நாட்டுக்குத் தேவையான தெளிவான கொள்கை ஒன்று இன்னும் இல்லை.அதை உருவாக்கவும் நீங்கள் முனையவில்லை.
தவறான வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கொண்டு நமது நாட்டிற்கே பெருமையுடன் இருந்த அணிசேராக் கொள்கையினை அழித்துவிட்டு தென்னாசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு சவால் விடும் அளவுக்கு கொள்கைகளை வகுப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்கள்.
உங்களது அமைச்சரவையின் சில அமைச்சர்களது அறிவீனமான உரைகள் புத்திஜீவித்துவமற்ற உரைகள் இவற்றையே தெளிவாகக் காட்டுகின்றது.
அண்டை நாடான இந்தியாவுடனான வரலாற்று, கலாசார, பாரம்பரிய, மதத் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே பிரிக்க முடியாத பிணக்குகள் ஏற்பட முடியாத இணைப்பு வரலாற்றுக் காலம் முதல் உள்ளது என்பதை நீங்கள் இலகுவாக மறந்து விடுகிறீர்கள்.சீனாவை நண்பனாக்கி இந்தியாவைச் சீண்டிக் காரியமாற்ற விளைகின்றீர்கள்.
ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது.அதிலிருந்தாவது உங்கள் வெளிநாட்டுக் கொள்கை, தேசிய பாதுகாப்புக் கொள்கைகளின் மீதான தவறுகளைத் திருத்த விளையுங்கள்.
சீனாவை நண்பனாக்குவதற்காக இந்தியாவை எதிரியாக்கும் கொள்கையினை மறந்து இந்தியாவும், சீனாவும் எமது நண்பர்கள் என்ற நிலைமைக்கு உங்களது கொள்கையினை மாற்றுங்கள்.
எமது நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எமது நாட்டில் மக்கள் இன, மத, மொழி, பால் வேறுபாடு கடந்து சரிநிகர் சமானமாக ஏற்றத்தாழ்வின்றி இணக்கப்பாட்டுடன் வாழவேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை.
இப்போது நான் உங்களது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஓரிரு வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.ஒரு நாடு ஒரு சட்டம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அது ஒரு நாடு இலங்கை என்பதாகவும், ஒரு சட்டம் என்பது இலங்கை மக்களுக்கான சட்டமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் உங்கள் ஒரு நாடு ஒரு சட்டத்தின் கீழ் நடப்பது என்ன?. உங்களது பார்வையில் நீங்கள் கூறும் ஒரு நாடு ஒரு சட்டம் சொல்வதென்ன.? இது சிங்களப் பௌத்த நாடு. இங்கு சட்டமும் சிங்கள பௌத்த சட்டமே.
இந்த இடத்திலே நாம் எமது நீதியமைச்சர், ஜனாதிபதி, சட்டத்தரணி அலி சப்ரியை நினைத்து கவலைப்படுகின்றேன்.ஒரு திறமையான, இளமையான புத்திகூர்மை கொண்ட அமைச்சர்.
அவருடைய திறமைக்கு களங்கத்தை ஏற்படுத்தி அவருக்கு சட்டவாக்கம் பற்றி ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதியவர்கள் நியமித்த ஆலோசனைக் குழுவினை நோக்கும் பொழுது நான் உண்மையில் எமது நீதியமைச்சர் குறித்துக் கவலைப்படுகிறேன்.
அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறும் நோக்கம் ஒன்றையே இலக்காகக் கொண்டு எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆட்சியமைத்து 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டு வருவேன் எனக் கூறி பௌத்த சிங்கள மக்களினை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது உணர்ச்சியினை தான் ஆட்சியமைப்பதற்கான அத்திவாரமாக்கினார்.
அன்று அவர், ஆட்சிக்காக மூட்டிய தீப்பொறி 6 தசாப்த காலமாக இந் நாட்டில் கொழுந்து விட்டெரிந்தது.அது முறையாக அணைய முன்பு ஒரு நாடு ஒரு சட்டமென்று இன்னொரு தீப்பொறியினை ஏற்றுவதற்கு முயல்கின்றீர்கள்.
ஆட்சியதிகாரத்தினைத் தக்க வைக்க வேண்டும் என்ற உங்களது இந்த ஆர்வத்தால் நீங்கள் மூட்டும் இரண்டாவது தீப்பொறி இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு நாட்டை எரிய வைக்கப் போகின்றதோ, வரலாற்றிலிருந்து நீங்கள் பாடம் எதனையும் கற்கவில்லை.மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை இழைத்துக் கொண்டு செல்கின்றீர்கள்.
இதே போன்றுதான் கிழக்குத் தொல்பொருள் ஜனாதிபதி செயலணி என்று ஒன்றை அமைத்து கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்களது பாரம்பரிய வழிபாட்டிடங்களையும், பாரம்பரிய நிலங்களையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றீர்கள்.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களுக்கு மேலாகியும் வடக்குக்கிழக்கில் இராணுவ முகாம் அமைப்பதும், புதிய படையணிகளை உருவாக்கி அவற்றை வடக்குக், கிழக்கில் இருந்து வைப்பதும் இன்னமும் முன்னர் கையகப்படுத்திய தனியார் நிலங்களினை மீளக்கொடுக்காது புதிதாக படைத்துறை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்வதும் நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளேயாகும்.
உங்களை ஆட்சி பீடம் ஏற்றி அலங்கரித்து அழகுபார்த்த பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை மக்கள் இன்று உங்களைச் சரியாக இனங்கண்டுள்ளார்கள்.முறையானதும் சரியானதும், பொருத்தமானதுமான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என்பதனை அவர்கள் இனங்கண்டுவிட்டார்கள்.இன்று நாட்டில் எழுந்துள்ள வெகுசனக் கிளர்ச்சி இதனை நன்கு வெளிக்காட்டி நிற்கின்றது.
வெளிநாட்டில் விலையுயர்வு ஏற்படின் உள்நாட்டில் விலையும் உயரவேண்டுமென்றால், ஜனாதிபதி எதற்கு, நிதியமைச்சர் எதற்கு, அமைச்சரவை எதற்கு என்று ஓங்கி ஒலித்து லிப்ரன் சுற்றுவட்டத்தை அன்று கலவர பூமியாக்கிய விமல் வீரவன்ச, உதய கமம்பம்பில, வாசுதேவ நாயக்கார போன்றவர்கள் இன்று எங்கே.?
எரிபொருள் விலை ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்ட போது நாடாளுமன்றத்துக்கு மிதி வண்டியில் படை குடி சகிதம், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகிதம் வந்த போராட்ட வீரர்கள் எங்கே.
2500 ரூபாவுக்கு ஒரு மாதம் ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற பொருளாதார நிபுணர் பந்துல குணவர்த்தன எங்கே?மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டது. அது ஆட்சி மாற்றத்தில் மட்டுமே முடியும். அது வரை வேண்டுமானால் உங்கள் அராஜகத்தைத் தொடரலாம்.
ஆனால், இறுதி வெற்றி நாட்டுக்கும் எமது மக்களுக்குமேயாகும். நீங்கள் அனுபவிக்கும் வெற்றி ஒரு சிறிய காலமாகவே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

பேஸ்புக் காதல் மயக்கம்! ரகசிய கோப்புகளை பெண்ணுக்கு அனுப்பிய ராணுவ வீரர்! பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை News Lankasri

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022