அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் விரைவாக தமது வங்கிக் கணக்கை திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு பொது வங்கி விடுமுறை நாட்களில் சேமிப்புக் கணக்குகளை திறக்கும் வசதி செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி அஸ்வெசும கணக்கை திறப்பதற்காக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் பல கிளைகள் பொது விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
வங்கி கணக்கு வசதி
சுமார் 10 இலட்சம் கணக்கு விபரங்கள் நலன்புரி வாரியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விரைவில் கணக்குகளை ஆரம்பித்து பலன்களைப் பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய, பிரதேச செயலகங்களூடாக வழங்கப்படுகின்ற கடிதங்களை பெற்றுக்கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள 4 அரச வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்குகளை திறக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலணை
இதன்படி, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை முடியும் வரை இந்த சமுர்த்தி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது 1,792,265 குடும்பங்கள் நலன்புரி நலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும், அவர்களில் 946,612 பேர் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர் அந்த இலக்கை எட்ட முடியும் எனவும் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |