தவறுகளை தட்டி கேட்பவர்களையே அரசாங்கம் கைது செய்கிறது: சாணக்கியன் கண்டனம் (Video)
தவறு புரிந்தவர்களை இன்றைய அரசாங்கம் கைது செய்யாது, மாறாக அதனை தட்டி கேட்பவர்களையே கைது செய்யும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, ”தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் யாரும் இந்த ஜனாதிபதிக்கு பணம் வாங்கி ஆதரவு வழங்கியிருப்பார்கள் என நான் நம்பவில்லை.
எனினும், கூட்டமைப்புக்கெதிராக ஹரின் பெர்னாண்டோ இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
எனினும், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையே புளோட் தலைவரும், டெலோ தலைவர்களும் கூறியிருக்கின்றனர்.
அவ்வாறு வாங்கியிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அவ்வாறு யாரும் வாங்கியிருக்கமாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.
நாட்டில் அதிகரிக்கும் தட்டுப்பாடுகள்
இன்று நாட்டில் பெட்ரோல், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்குமே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் தட்டுப்பாடுகள் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தாது உள்ளனர்.
தற்பொழுது பெட்ரோலின் விலை நான்கு மடங்காகவும், எரிவாயுவின் விலை இரண்டரை மடங்காகவும் அதிகரித்திருக்கிறது.
சீமெந்தின் விலை நினைத்து கூடப்பார்க்க முடியாத அளவு உயர்ந்திருக்கிறது. வீடு கட்டுவதென்பது சாதாரண மனிதனால் எண்ணி கூடப்பார்க்க முடியாத ஒன்றாகும்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களுக்கெதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவசரகால சட்டத்தினை வைத்து கொண்டு, கைது செய்யும் நடவடிக்கை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இன்று பொருளாதார ரீதியாக இலங்கை மக்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அஜித் நிவால் கப்ராலுக்கெதிராக இதுவரை எந்த விசாரணையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னர் நிதியமைச்சர்களாக இருந்த மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அலி சப்ரி ஆகியோர் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாததன் காரணத்தினால் தான் இன்று விலைவாசி அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் விலைவாசி அதிகரித்ததன் எதிரொலியாகவே இங்கு பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது என யாராவது கூறினால் அது பொய்யான தகவலாகத்தான் இருக்கும்.
இன்றைய நிலையில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 180 ரூபாயிலிருந்து 380 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளேயாகும்.
அவசரகால சட்டம்
இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தாது, அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி போராட்டக்காரர்களை கைது செய்து கொண்டிருக்கிறார்.
எமது வடக்கு- கிழக்கை சேர்ந்த பல இளைஞர்கள் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தினால் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர்.
இன்று காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை கைது செய்வது போன்று, வடக்கு- கிழக்கிலும் கைது செய்யப்படலாம். ஏனென்றால் வடக்கு- கிழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் செய்தவர்களை குறிவைத்து கொண்டிருந்தவர்கள், இப்போது கைது செய்யப்படலாம்.
ஊடகவியலாளர்களுக்கு கூட பாரிய அச்சுறுத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தது. முல்லைத்தீவில் ஒரு ஊடகவியலாளரின் அடையாள அட்டையை கடற்படை வீரர் பறித்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான நிலையில் எமது மக்கள் அடக்கி ஒடுக்கப்படும் போது, அவசரகால சட்டத்தினை ஜனாதிபதி கொண்டு வந்த போது, தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை கவலை தரும் விடயமாகும்.
இந்த சட்டத்தின் மூலம் விசாரணையின்றி 72 மணிநேரம் சிறையில் வைத்திருக்கலாம். சிறு விடயங்களுக்கு கூட 20 வருடகாலம் சிறையில் அடைக்கலாம்.
கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவின் அடக்கு முறையானது அராஜகமானதாகும். அதையும் தாண்டி ரணில் விக்ரமசிங்கவின் அடக்கு முறையானது எமது அரசியலமைப்பின் சட்டங்களை அடிப்படையாக கொண்ட அடக்கு முறையாகும்.
நீதிமன்றத்தினூடாக இவற்றை தட்டிக்கேட்கவேண்டிய சூழல் வரலாம்.
இதற்கு ஏன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் என்ற கேள்வியை தமிழ் பேசும் மக்கள் கேட்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் அரசியலமைப்பின் அடிப்படையிலான அடக்கு முறையை ரணில் அரசாங்கம் முடக்கி விடலாம்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் உட்பட பலர் அவசரகால சட்டத்திற்கு வாக்களித்தார்கள் என்பதை தமிழ் மக்கள் தெளிவாக பார்க்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். ஒரு பக்கத்தில் விலைவாசி அதிகரிப்பதால் மக்கள் வாழ முடியாத சூழல் காணப்படுகிறது.
வடக்கு- கிழக்கு பிரச்சினை
எதிர்காலத்தில் வடக்கு- கிழக்கு பிரச்சினை தீர்க்கப்படும் நிலையில் வடக்கு- கிழக்கில் வாழ்கின்ற இளைஞர்களுடைய விகிதாசாரம் குறைவடைந்து வருகின்றது.
மேலும், 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் அடக்கு முறை காரணமாக தப்பியோடியவர்கள் ஐரோப்பிய நாடுகள், மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.
இன்றும் பலர் மத்திய கிழக்கிற்கு சென்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் கோட்டாபய ராஜபக்சவின் தவறான செயற்பாடாகும்.
அவரை ஆதரித்தவர்கள் இதற்கு பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் தவறு புரிந்தவர்களை இன்றைய அரசாங்கம் கைது செய்யாது, அதனை தட்டி கேட்கிற இளைஞர்களையே கைது செய்கிறது.
பல தசாப்த காலங்களாக தமிழ் மக்களை அடக்கிய இந்த அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அதனை நியாயப்படுத்துகின்றார்கள்.
இதன் காரணமாக வடக்கு- கிழக்கு மக்கள் வருங்காலங்களில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
எதிர்வருங்காலங்களில் எமது மேய்ச்சல் தரையை அவர்கள் அபகரிப்பதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினால் கூட அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்.
இலங்கைக்கான நிதியுதவி
இவ்வாறான நிலையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன சரியான ஒரு கட்டமைப்பில்லாத அரசாங்கத்துக்கு நிதி வழங்க முடியாது என கூறியுள்ளனர்.
அனைவரும் இணைந்து சர்வகட்சி அரசு உருவாக்க வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு உரியவாறு செயற்பட வேண்டும்.
சர்வதேசம் எதிர்பார்த்தது மொட்டுக்கட்சியின் ஆட்சியை அல்ல. இந்த பொருளாதார நெருக்கடியை உருவாக்கியவர்களே இந்த அரசாங்கத்திலிருக்கும் போது எவ்வாறு உதவுவது என்று சர்வதேச அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.
தமிழர்களுக்கான தீர்வு
என்னை பொறுத்த வரையில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்பதற்காக எனது செயற்பாட்டினை முன்னெடுக்கவில்லை.
வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களுக்கான தீர்வு வேண்டும் என்பதனை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான விமர்சனங்களை செய்ய முடியுமே தவிர அதற்கான தீர்வினை நோக்கி பயணிக்க தெரியாது.
அவர்களுக்கு சுய புத்தியுமில்லை, சொல் புத்தியுமில்லை. எனது செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்கான செயற்பாடுகளாக மட்டுமே இருக்குமே தவிர வேறு நோக்கமிருக்காது.
சிலர் தாங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டால் வேறு வேலை தெரியாது. அதனை விட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. எனக்கு அவ்வாறு இல்லை.
இதன் காரணமாகவே நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களைக்கொண்டு எமது இலக்கினை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி விடுவதன் மூலம் தமது வாக்குகளை தக்கவைத்து கொள்ள முடியும் என என்னுபவர்கள் இவ்வாறான விமர்சனைங்களை முன்வைக்கின்றார்கள்.
சர்வகட்சி ஆட்சி
சர்வகட்சி ஆட்சியை அமைப்பதற்கு ராஜபக்சவினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டர்கள்.
இந்த சர்வகட்சி அமைக்கும் செயற்பாடானது சர்வதேசத்தினையும் போராட்டத்தில் ஈடுபவர்களையும் கவர்வதற்காகவே” என தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் டெல்லியில்! உறவை முறித்த மோடி அரசு : அரசியல் ஆய்வாளர் தகவல்(Video) |