அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்: வேலுகுமார்
"அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்" என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தைக் கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது.
மொத்த பொருளாதாரமும் மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது. இந்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பல மாதங்களுக்கு முன்னரே பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. செவிமடுக்கவில்லை. தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது. இன்று சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவது, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலையாகும்.
நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யக்கூடிய அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் செய்துவிட்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, 2000 பில்லியனுக்கு அதிகமான பணம் அச்சிட்டுவிட்டனர்.
அதுவே ரூபாவின் கொள்வனவு சக்தியை வீழ்த்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியை ரூபா 200 ஐ விட அதிகரிக்க விட மாட்டோம் என்று அடம் பிடித்தனர். பொருளாதார நிலைமைகளை மீறிக் கட்டுப்படுத்தினர்.
அதன் மூலம் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு லாபம் உழைக்க வழியமைத்துக் கொடுத்தனர். இதனால், மேலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. டொலர் பிரச்சினை மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. கடன் சுமையை மீளக் கட்டமைக்குமாறு கேட்டோம்.
அதனையும் செய்யவில்லை. இன்று அனைத்தையும்
முடித்துவிட்டு சர்வ கட்சி மாநாடு என்கிறார்கள். இதுவும் ராஜபக்சக்களின்
வெறும் மூடி மறைப்பு நாடகமே ஆகும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.