அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் 8250 ரூபா மாத்திரமே என தொழிலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் தொடர்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்த போதும் 8250 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு
ஏனெனில் , 7500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே சம்பளத் தொகையில் 8250 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
அது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுடன் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படும்”என ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 5975 அதிகரிக்கப்படும் அதேவேளை, 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 2275 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிகர சம்பள உயர்வான 8250 ரூபாய், 2027ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு முழுமையாக கிடைக்கும். இதனால், அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு ரூ. 8250 மாத்திரமே என்பதை பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |