முல்லைத்தீவின் சிக்கல்களை நிவர்த்திக்க வெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம்: ஆளுநர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும் மக்களின் தேவைகள்
தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கான
தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ( (P. S. M. Charles) சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் இடமாற்றங்கள்
மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை கோட்டக்கல்வி பணிப்பாளர்களும், வலயக்கல்விப் பணிப்பாளர்களும் மேற்கொண்டு வருவதால் பல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதோடு இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிக்கையிடாமல் உள்ளமை பாரிய ஒரு சிக்கல் நிலையாகவே காணப்படுகின்றது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறும், உரிய தரவுகளை சேகரிக்குமாறும், பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை நியமித்து வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.
புலம்பெயர் நாடுகள்
இதேவேளை, யுத்த காலத்தில் நாட்டிலிருந்து வெளியேறி தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் தாய் மண்ணுக்கு வருகை தந்து அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைகளை நிவர்த்திப்பதற்கு அரச சேவைகள் மாத்திரம் போதுமானதாக இல்லை எனவும் அந்தந்த சமூகத்தில் வாழும் மக்களும், புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகளும் மென்மேலும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் போது தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் முன்னேற்றத்தை அடையக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும்” வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |