கோட்டாபயவை கைது செய்க! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (PHOTOS)
இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கோட்டாபய மற்றும் ராஜபக்ச தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்டக்களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தினை பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இச்சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்.
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை கைது செய்து நீதியின் முன் சிங்கப்பூர் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்றுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்கள்
தற்பொழுது பல நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்கள் முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இனப்படுகொலையாளி கோட்டாபயவை உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்யக் கோரி, சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கிய கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
கோட்டாபய ராஜபக்ச, இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.
1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமா அதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் சுவரொட்டிகள் கோட்டாபயவை கைது
செய்வதற்கு சர்வதேச மட்டத்தில் மேலும் வலுச்சேர்க்கும் என்று நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.