கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்!
ஒரு நாடு உலக அளவில் தனது சிறப்பான ஆட்சி முறையின் ஊடாக பிரசித்தி பெற்ற வரலாறுகளை இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் முறியடித்துவிட்டார்கள். இன்று சர்வதேச அளவில் பேசுப் பொருளாக இலங்கை மாறியுள்ளது. ஆனால் யாரும் அதன் ஆட்சி முறையை பின்பற்ற போவதில்லை.
மகிந்தவின் அரசியல் வருகையுடன் இலங்கை அரசியலில் ராஜபக்சர்களின் ஆட்சி நங்கூரமிடப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தார். பின்னர் தனது பாரியாருடன் அமெரிக்கா சென்றார். அங்கு சாதாரணமான வேலைகளை செய்து வந்தார்.
இதனை தொடர்ந்தே மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக பதியேற்றார். இதன் பின்னரே மீண்டும் கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் இலங்கைக்கு வருகை தந்தார்.
உள்நாட்டு போரில் ஈடுபட்டு பெருபான்மை மக்களின் ஆதரவை பெற்று ராஜபக்சர்கள் இலங்கை அரசியலில் வெற்றி நடைபோட்டனர். அவ்வப்போது அரசியல் சரிவுகளை எதிர் நோக்கினாலும் ராஜபக்சர்கள் தளர்ந்துவிடவில்லை. இதுவரை காலமும் ராஜபக்சர்களுக்கான ஆதரவு நீடிப்பது கசப்பான உண்மையே.
7ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய
இவ்வாறான அரசியல் நகர்வுகளின் பெரும் திருப்பு முனையாகவே 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச அடியெடுத்து வைத்தார்.
உள்நாட்டு போரில் சிறுபான்மையினரிடம் இருந்து நாட்டை மீட்டவர் நம் எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த பெருபான்மையின் நாயகனாக கோட்டாபய உருவெடுத்தார்.
ஆரம்பத்தில் நாயகனாக வளம் வந்தவரின் ஆட்சியின் சில காலங்களிலே என்றும் காணாத இன்னல்களை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவித்தனர். இன்னல்களை வழங்குவதில் இன,மத,பேதத்தை வெளிக்காட்டாமை அவரின் பெருந்தன்மையாகவே பார்க்க வேண்டும்.
சாதாரணமாக ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி மக்களின் பெரும் புரட்சியை உருவாக்கும் அளவிற்கு மோசமடைந்தது. உணவு பொருட்கள் தட்டுபாடு, எரிவாயு மற்றும் எரிபொருள் என ஆரம்பித்தவை பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாற்றமடைந்தது. இதனால் பாதிப்படையாத துறைகளே இல்லை. வரிசைகள் நீண்டன.மக்களின் வாழ்க்கை ஆதிகாலத்தை நோக்கி நகர்ந்ததென்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் பொறுமையிழந்த மக்களின் போராட்டம் வெடித்தது.மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி சென்று பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
யார் இந்த அயோமா ராஜபக்ச?
இவ்வாறு அரசியலில் முடிவை நோக்கி நகர்ந்த ராஜபக்சர்களின் அரசியல் நகர்வுகளில் சாதாரண குடும்ப பெண்ணாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கணவரின் நிழலாக நகர்ந்த இலங்கையின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்ற அயோமா ராஜபக்ச தற்போது ஆராயப்பட வேண்டிய ஒருவராவார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அயோமா ராஜபக்ச சாதாரண குடும்ப பெண்ணாகவே தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளார். மனோஜ் ராஜபக்ச என்ற தனது மகனின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நல்ல தாயாகவும், தனது கணவரை பராமரித்துக்கொள்ளும் சிறந்த மனைவி என்ற குறுகிய வட்டத்திற்குள்ளே தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.
அரசியலிலோ, சமூக செயற்பாட்டிலோ அல்லது வேறு துறைகளிலோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத அயோமா ராஜபக்ச சாதாரண ஒரு பெண்ணின் மனநிலையுடன் செயற்பட்டமையால் இன்று பேசு பொருளாக மாறியுள்ளார்.
ஆம்! இலங்கையை விட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று, அங்கு அவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மனைவி அயோமா ராஜபக்சவின் குடியுரிமையைக் கொண்டு தான் மீண்டும் அமெரிக்காவில் குடிபுகும் திட்டத்தில் கோட்டாபய இறங்கியுள்ளார்.
அகதியான கோட்டாபய
நாடு விட்டு நாடு அகதியை போன்று அலையும் கோட்டாபயவை அரசியல் தரப்பினர் பலரும் கேலி செய்த வண்ணம் தகவல்களை வெளியிட்டனர்.
செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கிய கோட்டாபயவிற்கான ஒரே ஆறுதல் அவரது மனைவியின் அமெரிக்க குடியுரிமையாகும்.
இத்தனை வருட அரசியல் பயணத்தில் எத்தனை இடங்களில் அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு பயணித்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதுவரையில் அயோமா ராஜபக்ச தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவலாக ஊடகங்கள் பதிவிட்ட பதிவுகள் காண்பதற்கரிய காட்சிகளாகவே உள்ளன.
அயோமா ராஜபக்ச பற்றிய பதிவு
இந்நிலையில் சற்று தீவிரமாக ஆராய்ந்தோமானால் கோவிட் காலங்களில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது. இதன்போது ஊரடங்கு சட்டங்கள் விதிக்கப்பட்டு வெளியில் செல்வதற்கு சில சட்ட திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த கால கட்டத்தில் அயோமா ராஜபக்ச சாதாரண பெண்களை போன்று வீட்டு தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்த காணொளி ஒன்று சிங்கள் ஊடகங்களில் பதிவிடப்பட்டு பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இன்று அனைத்து ஊடங்களிலும் கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக பார்க்கப்படுகிறார். பரவலாக பேசபடுகிறார். இதுவரை காலம் என்ன நடந்தாலும் கணவனுடன் சேர்ந்து பயணித்தவர் இப்போது கணவரை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் தனது பெயரையும் பதித்துவிட்டார்.
தம்மை அடையாளப்படுத்துவதற்கு மாபெரும் சக்திகளோ, உலகை வியக்க வைக்கும் திறன்களோ தேவையில்லை, பெண்கள் பெண்மையுடன் நடந்துகொண்டாலே போதுமானது என்பதை இங்கு அயோமா வலியுறுத்தியுள்ளார்.
மறைமுகமாக நிகழ்ந்தாலும் பெண் அடிமைத்தனங்கள் எப்போதோ முறியடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து துறைகளிலும் தம்மை அடையாளப்படுத்தி பெண்கள் பெரும் சக்திகளாக எப்போதோ மாறிவிட்டனர்.
இந்நிலையில் ஒரு நாட்டின் முதல் பெண்மணியாக இருந்த அயோமா, தனது அமெரிக்க குடியுரிமையை பயன்படுத்தி தனக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு அமெரிக்கா சென்றிருக்க முடியும். ஆனால் அத்தனைக்கு பிறகும் இக்கட்டான சூழ்நிலையில் தனது கணவருடன் பயணிக்க வேண்டும் என்று அவர் எடுத்த தீர்மானமே இன்று கோட்டாபயவின் பாதுகாப்பு அஸ்த்திரமாக மாறியுள்ளது.
காலத்தின் கையில் கோட்டாபயவின் முடிவு
ஒரு மனிதன் எவ்வளவு அநியாயங்கள் செய்திருந்தாலும் அவனை நேசிப்பவர்களின் நற்செயல்களால் அவன் சில காலம் பாதுகாக்கப்படலாம் என்பது காலத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கை.
எத்தனையோ வரலாறுகள் பார்த்து விட்டோம், பெண்களால் அழிந்த ஆட்சியும் உண்டு, காப்பாற்றப்பட்ட கணவர்மார்களும் உண்டு.
இலங்கை வரலாற்றில் மனைவியின் உரிமையால் பாதுகாக்கபட்டு கோட்டாபய அவரின் குடும்பத்துடன் இணைந்து வாழ்வாரா அல்லது மக்களின் சாபங்களால் துரத்தப்பட்டு மீண்டும் இலங்கை வந்து அழிவுக்கான பாதையை வகுப்பாரா என்பது காலத்தின் கையிலே உள்ளது.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
