மீண்டும் கோட்டாபய அரசியலில் ஈடுபடுவாரா.. அரச தரப்பில் இருந்து வெளியானது அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பார் என தாம் நம்பவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவுக்கு சுதந்திரம் வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இந்த நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கு இருக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
அவர் அமெரிக்க குடியுரிமையை துறந்து நாட்டுக்கு சேவை செய்ய வந்தவர்.
போராட்டக்காரர்களுக்கு பயந்து வெளிநாட்டில் பதுங்கியிருக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்து நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.