மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...!
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேசத்தில் எப்போதும் பேசுபொருளாகவே காணப்படுகின்றது. இலங்கையின் இன்றைய நிலை பல உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த படிப்பிணையாகவும், அரசியல் ரீதியில் ஓர் எச்சரிக்கை ஒலியாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை குடிமக்களை, வாட்டி வதைத்த பொருளாதார நெருக்கடி பல புரட்சிகளையே அரங்கேற்றிச் சென்றிருக்கின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் : சூடுபிடிக்கும் கொழும்பின் களநிலவரம் (Live) |
எரிபொருள் நெருக்கடி, பற்றாக்குறை, எரிவாயு பற்றாக்குறை, எரிபொருள் - எரிவாயு வரிசை, அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, வருமானமின்மை, கல்வி நடவடிக்கைகள் சீர்குழைவு, விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு என பொதுமக்கள் இனி இல்லை என்கின்ற அளவுக்கு ஒரு துன்பகரமான சூழலை அனுபவித்தும் கடந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்.
போராட்டங்களால் துரத்தியடிக்கப்பட்ட ராஜபக்சர்கள்..
இவ்வாறான சூழ்நிலையில்தான் பதவியில் இருந்த அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தனர்.
கடந்த மார்ச் மாத இறுதியில் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்த நாள் முதல் நாட்டில் அவ்வப்போது ஊரடங்கு சட்டங்களும், அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டு வந்ததுடன் போராட்டங்களும் தீவிர நிலையை அடைந்தன.
இதன் எதிரொலியாக கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த பலரால் தாக்குதல் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல் கலவரமாக மாற்றமடைந்து அதன் விளைவாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதனைத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்க, ஒருபுறம் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும் சீர்குழைந்து அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே இருந்தன.
போராட்டக்காரர்களின் குரல் தொய்வு நிலையை அடையாமல் தொடர்ந்தும் ஒலித்ததன் விளைவினால் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது எந்த நேரத்திலும் மீண்டும் தடை விதிக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை |
மீண்டும் இலங்கை வருவாரா கோட்டாபய?
நாட்டை விட்டு மாலைதீவிற்கு தப்பிச் சென்ற கோட்டாபய அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கும் அவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவ்வாறான பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது இலங்கைக்கு மீண்டும் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இதுவரை நாடு திரும்பாத கோட்டாபய, அமெரிக்காவில் உள்ள தனது மகன் மனோஜ் ராஜபக்சவின் பாதுகாப்பு கருதி அங்கு செல்வதையும் அவர் அப்போது தவிர்த்து வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகைத் தரலாம் என அவரின் நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க நேற்று அறிவித்திருந்தார்.
யாழில் தேநீரை 10 ரூபாவிற்கும், மூலிகை உணவுகளை 30 ரூபாவிற்கும் விற்பனை செய்யும் உணவகம் (Video) |
மீண்டும் அமெரிக்காவை நாடும் கோட்டாபய
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது மீண்டும் அமெரிக்காவில் சென்று வசிப்பதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட்டாபயவின் மனைவியான அயோமா ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால், முன்னாள் ஜனாதிபதி கிரீன் கார்ட் லொட்டரிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் அமெரிக்கக் குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்த பின்னர் அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்திருந்தார்.
கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை பெற்றது எப்படி?
ஒரு நபர் வேறொரு நாட்டில் குடியுரிமையைப் பெறும்போது, அவரது முதல் நாட்டின் குடியுரிமை தானாகவே இரத்து செய்யப்படுகிறது. புதிய நாட்டின் குடிமகனாக மாறுகிறார்.
அந்த முதல் நாட்டின் இரட்டை குடியுரிமை கோரப்பட்டால் மட்டுமே மீண்டும் குடியுரிமை வழங்கப்படுகிறது. அல்லது, நீங்கள் இரண்டாவது குடியுரிமை பெற்ற நாட்டை விட்டு வெளியேறி, பூர்வீக நாட்டிற்கு அறிவித்து மீண்டும் குடியுரிமையை கோரலாம்.
இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது |
இதன்படி, 2003ஆம் ஆண்டில் அமெரிக்க குடிமகனாக ஆன பிறகு, கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு பலமுறை வந்துள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை.
அதன் பின்னரான நாட்களில் சுற்றுலா விசாவில் 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி அன்று 30 நாட்களுக்கு மட்டுமே சுற்றுலா விசாவுடன் இலங்கைக்கு வந்தார்.
எனவே, அவர் இலங்கையில் சுற்றுலா மட்டுமே செல்ல முடியும். எனினும், 2005 ல் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில், உண்மையில் ஏன் செப்டம்பர் 4, 2005 அன்று இலங்கைக்கு வந்தார் என்பதை கூறியுள்ளார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரர் போட்டியிட்டார். சகோதரரின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக நான் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக அவர் கூறினார்.
விசா நிபந்தனைகளை மீறி ஒருவர் இலங்கையில் நுழைந்தால் அல்லது தங்கியிருந்தால், அவர் குடிவரவு மற்றும் குடிவரவு சட்டத்தின் பிரிவு 45 (1 (ஏ) ஐ மீறுவதாகும். இந்த குற்றத்திற்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வாறான நிலையிலேயே சுற்றுலா விசாவில் வந்த கோட்டாபய தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் இதேவேளையில், 2005 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இலங்கை குடிமகன் அல்லாத கோட்டாபயவின் பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது தொடர்பான பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.
அவ்வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். அவர் 18ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அதுவரை காலமும் கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. அதன் பின்ன 18ம் திகதி- வெள்ளிக்கிழமை- இரட்டை குடியுரிமைக்கு கோட்டாபய விண்ணப்பித்தார்.
19, 20ம் திகதிகள் வார இறுதி நாட்கள். 21ம் திகதி இரட்டை குடியுரிமைக்கான பணத்தை செலுத்தினார். இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் பம்பலப்பிட்டியில் உள்ள குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் அலுவலகத்தில் இருந்தது.
இரட்டை குடியுரிமை கோரிக்கையுடன் பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, கல்வித் தகுதிகள், பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள், இலங்கையில் உள்ள சொத்து சான்றிதழ்கள் அல்லது வெளிநாட்டு சொத்து மற்றும் பிரமாண பத்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை பரிசீலித்த பின்னர், பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து அனுமதி அறிக்கைகள் பெறப்படுகின்றன.
இந்த அனுமதி அறிக்கைகள் அமைச்சக அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, நீண்ட செயல்முறைக்குப் பிறகு, இரட்டை குடியுரிமை வழங்கலாமா வேண்டாமா என்பதை அமைச்சகம் தீர்மானிக்கிறது.
ராஜபக்சர்களின் ஆட்சியை அமைக்க பசில் பிரயத்தனம் - இழுத்தடிக்கும் ரணில் |
ஆனால் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றது அசாதாரணமானது. கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமை கோரி தாக்கல் செய்த எந்த தகவலும் பொலிஸாரிடம் இல்லை என்பது, சண்டே ஒவ்சேவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்ததாக தகவல் வெளியிட்டிருந்தது.
பல்வேறு முரண்பாடான தகவல்கள், மாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் போன்றவற்றை உள்ளடக்கி கோட்டாபபயவுக்கு இரட்டை குடியுரிமை நவம்பர் 30, 2005 அன்று வழங்கப்பட்டதாக சன்டே ஒப்சவர் தகவல் வெளியிட்டிருந்தது.
நவம்பர் 24, 2005 அன்று பொது பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 24, 2005 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் படி கோட்டாபய ராஜபக்ச அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
எனினும், உண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டபோதும், அடுத்த ஆறு நாட்களிலும் கோட்டாபய ஒரு அமெரிக்க குடிமகன் மட்டுமே என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இராஜதந்திர கடவுச்சீட்டு
டிசம்பர் 20, 2005 அன்று பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பல்வேறு சிறப்பு சலுகைகளை உடைய தனது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார்.
இரட்டை குடியுரிமையுடைய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் தனது இரட்டை குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்பினும், கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமை சான்றிதழை சமர்ப்பித்ததற்கான எந்த ஆதாரமும் அந்த துறையின் கோப்புகளில் இல்லை எனவும் அவர் ஏற்கனவே இரட்டை குடிமகனாக குறிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டதில் கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து சர்ச்சைகளும் விமர்சனங்களும் தோன்றியிருந்தன.
இலங்கை குடியரசை விட நான் ஆயிரம் மடங்கு பணக்காரன்! ரணில் |
ஜனாதிபதி தேர்தல்..
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் என தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது.
அதன் படி 2019ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யும் ஆவணத்தை அவர் சமர்ப்பித்திருந்தார். இதன்படி, அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் வகையில் கோட்டாபய ராஜபக்வினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா 2019ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜாவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா ஆவணத்தை வெளியிட்டிருந்தது.
எனினும், தேர்தல் காலங்களிலும் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் சர்ச்சைகள் வெளியாகியிருந்தன. அமெரிக்க குடியுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்ட கோட்டாபயவுக்கு அதிர்ஸ்டம் கைகொடுக்குமா..
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நிலையின் காரணமாக பதவியை துறந்துள்ள கோட்டாபய மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று குடியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என்பதால் அவர் மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையிலான அரசாங்கம் ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்திருந்தது.
குறிப்பாக, மத்திய வங்கி பிணை முறி மோசடி, 52 நாள் அரசியல் சதித்திட்டம் மற்றும் ஏப்ரல் குண்டுத் தாக்குதல் போன்றன நாட்டு மக்களிடத்தில் நல்லாட்சி தொடர்பில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இவற்றை காரணியாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்து கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கையில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை கோட்டாபய ராஜபக்ச இரத்துச் செய்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, அரச அதிகாரியாக கடமையாற்றிய கோட்டபாய அரசியலில் உள்நுழைவதற்கென அமெரிக்க குடியுரிமையை இழந்தார்.
அரசியலில் அவர் காலடித்தடம் பதித்ததும் பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்றதன் காரணமாக அவரது அரசியல் எதிர்காலம் சிறப்பானதாகவே அமையும் என அவர் கருதியிருக்கலாம். இதனால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமையை ஒரு இழப்பாக அவர் கருதியிருக்க வாய்ப்பில்லை.
எனினும், எந்த அரசியலுக்காக அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாரோ அதே அரசியல் அவரை துரத்தி அடித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
இன்று திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டது போல வசிப்பதற்கு நிரந்தர இடமின்றி, இலங்கையிலும் வசிப்பதற்கு இயலாத நிலையில் கோட்டாபய நாடு நாடாக புகலிடம் தேடிச் செல்ல வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் என்பது நிரந்தரமற்றது என்பதும், ஒரே சமயத்தில் உயரத்திற்கும், உயரத்தில் இருந்து கீழும் தள்ளிவிடக் கூடிய வல்லமை கொண்டது என்பதும் மீண்டும் ஒரு முறை கோட்டாபய விடயத்தில் நிரூபணமாகியுள்ளது. அரசியலால் வஞ்சிக்கப்பட்டு அதள பாதாளத்தில் விழுந்த தலைவர்களுள் கோட்டாபயவிற்கும் ஒரு தனி இடம் உண்டு.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், அமெரிக்க குடியுரிமைப் பெற்ற தனது மனைவி அயோமா ராஜபக்சவின் குடியுரிமையைக் கொண்டு தான் மீண்டும் ்அமெரிக்காவில் குடிபுகும் திட்டத்தில் கோட்டாபய தீவிரமாக இறங்கியுள்ளார். அவரின் அதிர்ஸ்டம், அல்லது அவரின் மனைவின் அதிர்ஸ்டம் கைகொடுக்குமாக இருந்தால் மீண்டும் கோட்டாபய அமெரிக்காவைச் சேரலாம்..
இந்த நிலையில், மீண்டும் அமெரிக்காவை நாடும் கோட்டாபயவின் நகர்வு வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...