கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை குறித்து, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து மேலதிக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். எனினும், இந்த வழக்கில் முறைப்பாட்டாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (28.10.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின்னரான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ச சார்பில் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.