நாட்டுக்கு சேவை செய்யவே கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்:போராட்டகாரர்களுக்கு அஞ்சி அவர் வெளிநாட்டில் இருக்க இடமளிக்க முடியாது - பிரசன்ன ரணதுங்க
போராட்டகாரர்களுக்கு அஞ்சி அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க இடமளிக்க முடியாது எனவும் அப்படி செய்தால், அவரது மனித உரிமை மீறப்படும் எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவார் என நம்பவில்லை
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வரும் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நான் எந்த வகையிலும் நம்பவில்லை. நாட்டின் சாதாரண மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் கிடைக்க வேண்டும்.
நாட்டுக்கு சேவை செய்யவே அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு வந்தார். போராட்டகாரர்களுக்கு அஞ்சி அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க இடமளிக்க முடியாது.
அப்படி செய்தால், அவரது மனித உரிமை மீறப்படும். முன்னான் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்
நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கும்.
நாடாளுமன்றத்தில் தற்போதும் பொதுஜன பெரமுனவுக்கு 145 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்தது.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் பலமாக இருக்கும். அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பாலானவர்கள் எதிர்ககட்சியில் இருக்கின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியுடனேயே இருந்தன.
சர்வக்கட்சி அரசாங்கமோ அல்லது இடைக்கால அரசாங்கமோ அதற்கு ஆதரவளிப்பது என்றால் நேர்மையான மனநிலையில் அதனை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அமைச்சர்களை நியமிக்கும் போது அதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை கட்சிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.