கோட்டாபயவின் இறுதி முடிவு என்ன... சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் (VIDEO)
புதிய இணைப்பு
கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை எனவும் சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே கோட்டாபய சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் அதிகளவான ஊடகவியலாளர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் இருக்கின்ற பகுதியை கடந்து செல்லவில்லையெனவும். கோட்டாபய ராஜபக்சவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் இது வரை தகவல்கள் எதுவும் தெரியவில்லையெனவும் அங்குள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்தவாறே கோட்டாபய வேறு நாட்டிற்கு பயணிப்பாரா என்பது தொடர்பிலும் இது வரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் பதவி விலகாது ராணுவ ஜெட் விமானத்தில் மாலைத்தீவு சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து SQ437 என்ற விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலைதீவிலிருந்து சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் இன்று சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிங்கபூரில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பயணத்தை முன்னெடுத்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்த சொகுசு விடுதியில் மாலைதீவின் முக்கியஸ்தர்கள் இன்று காலை சந்தித்து பேசியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகலை அறிவிப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்: கமல்
தொடர்புடைய செய்தி
பதவி விலகாத கோட்டாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
பாதுகாப்பு சிக்கல் - சிங்கப்பூர் பயணத்தை திடீரென நிறுத்திய கோட்டாபய ராஜபக்ச